வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (08/11/2018)

கடைசி தொடர்பு:09:08 (08/11/2018)

பாகிஸ்தான் சிறையில் 8 ஆண்டுகளாக சிக்கித்தவித்த கிறிஸ்துவப் பெண் விடுதலை!

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்துவப் பெண் ஆசியா பீபி, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 கிறிஸ்துவ பெண்

பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெண் ஆசியா பீபி. இஸ்லாம் மதம்குறித்து இழிவாகப் பேசியதாகக் கூறி, தெய்வ நிந்தனை சட்டத்தின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டு, தனிமைச் சிறையில் அடைத்தது வைக்கப்பட்டார். கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், கடந்த 2010-ம் ஆண்டு இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆசியா பீபி தரப்பில் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், தண்டனையை உறுதிசெய்தது. இதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில், கடந்த 31-ம் தேதி தீர்ப்பு வெளியானது. தலைமை நீதிபதி சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு, ஆசியாவுக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்துசெய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், ஆசியாவின் விடுதலை உறுதியானது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டன. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். நீதிமன்றம் தீர்ப்பளித்தும் ஆசியா விடுதலை செய்யப்படாமல் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஆசியா பீபி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. லாகூரிலிருந்து விமானத்தில் சென்றார் எனவும், அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியா பீபி-க்கு உதவுவதாகப் பல்வேறு உலக நாடுகளும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.