வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (08/11/2018)

கடைசி தொடர்பு:13:20 (08/11/2018)

`நீ ஒரு மோசமானவன், பயங்கரமான மனிதர்!' - கேள்வி கேட்ட சிஎன்என் நிருபரை வசைபாடிய ட்ரம்ப்

மெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப், சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது முதல் செய்தியாளர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்துவருகிறார். அமெரிக்கவில் மிட்டெர்ம் தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, நேற்று டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த செய்தியாளர் சந்திப்பில், சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா இரு கேள்விகளை எழுப்பினார். 

டொனால்ட் ட்ரம்ப்

மிட்டெர்ம் தேர்தல் பிரசாரத்தின்போது, 'குடிபெயர்ந்தவர்கள்'  பற்றியே அதிகமாகப் பேசியது ஏன் என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த  ட்ரம்ப், ''என்னை நல்லபடியாக நாட்டை ஆட்சிசெய்ய விடுங்கள். உங்கள் சிஎன்என்-னை நீங்கள் நல்லபடியாக நடத்துங்கள்'' என்று காட்டமாகக் கூறினார். கடந்த 2016 - ம் ஆண்டு, அமெரிக்க தேர்தலின்போது ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக ட்ரம்ப்பிடம் அடுத்த கேள்வியை வீசினார் ஜிம் அகோஸ்டா.  

இதனால் மேலும் கோபமடைந்த ட்ரம்ப், ''சிஎன்என் உன்னை மாதிரி ஆள்களையெல்லாம் வேலைக்கு வைத்திருப்பதற்காக வெட்கப்பட வேண்டும். நீ ஒரு மோசமானவன், பயங்கரமான மனிதர். வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டரிடமும் நீங்கள் ரவுடித்தனத்தைக் காட்டியிருக்கிறீர்கள். மனிதர்களை இப்படியெல்லாம் நடத்துவது சரியானாதா'' என்று சீறினார். அதோடு, சிஎன்என் ஏராளமான பொய்ச் செய்திகளைப் பரப்புவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். 

இந்தச் சமயத்தில், வெள்ளை மாளிகைப் பெண் ஊழியர் ஒருவர், அகோஸ்டா கையில் வைத்திருந்த மைக்ரோ போனை பறிக்க முயன்றார். அகோஸ்டா அதைத் தடுத்தார். பின்னர், அந்தப் பெண் அவரிடத்தில் நகர்ந்து சென்றார். தொடர்ந்து வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து ட்விட் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அகோஸ்டா வெள்ளை மாளிகைப் பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. தற்போது, அகோஸ்டாவுக்கு வெள்ளைமாளிகைக்குள் நுழையும் பாஸ் ரத்துசெய்யப்பட்டுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க