வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (08/11/2018)

கடைசி தொடர்பு:16:25 (08/11/2018)

அமெரிக்க மாகாண ஆளுநராகும் ஓரினச் சேர்க்கையாளர் ஜாரெட் போலிஸ்!

அமெரிக்காவில் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள், பழங்குடியினப் பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர் எனப் பல்வேறு பிரிவுகளில் முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகள் பதிவாகி உள்ளன. 

ஜாரெட் போலிஸ்

தன்னை 'ஓரினச்சேர்க்கையாளர்' என்று வெளிப்படையாக அறிவித்த ஜாரெட் போலிஸ், தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் கொலராடோ ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவில் மாநில ஆளுநர் பதவி வகிக்கும் முதல் ஓரினச்சேர்க்கையாளர் என்ற பெருமையை ஜாரெட் போலிஸ் பெற்றுள்ளார்.

மிச்சிகன் மாகாணத்திலிருந்து பாலஸ்தீன்-அமெரிக்கப் பெண்மணியான ரஷிடா டிலெய்ப் மற்றும் மின்னெசோடா மாகாணத்திலிருந்து இல்ஹான் ஓமர் ஆகியோர் வெற்றிபெற்று, அமெரிக்க மாகாணத்தேர்தலில் வெற்றிபெற்ற முதல் இஸ்லாமியப் பெண் பிரதிநிதிகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்கள். தனது வெற்றியைப் பற்றி ரஷிடா டிலெய்ப், ``முடியாது என்று நாம் நினைத்ததை மாற்றியமைத்து வரலாறு படைத்துள்ளோம். எனவே, எதையும் நம்மால் சாத்தியமாக்க முடியும் என்பதை நாம் நம்ப வேண்டும்." எனக் கூறினார்.

இல்ஹான் ஓமர்

இன்னொரு இஸ்லாமியப் பெண் பிரதிநிதியான இல்ஹான் ஓமரின் பூர்வீகம் சொமாலியா நாடாகும். தனது 12-வது வயதில் அகதியாக சொமாலியாவிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறியவர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த தடைக்கு எதிராகப் பலமுறை பேசியிருக்கிறார். ``நாம் ஒன்றுபட்டு சாத்தியமாக்கியுள்ளோம்" என ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் பிரதிநிதிகளாக டெப் ஹாலண்ட் மற்றும் ஷாரிஸ் டேவிட்ஸ் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஷாரிஸ் டேவிட்ஸ், அமெரிக்க மாகாணப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்கப் பழங்குடியின ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் வரலாற்று நிகழ்வாகும்.