வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (08/11/2018)

கடைசி தொடர்பு:21:20 (08/11/2018)

கொசுக்களே இல்லாத வால்ட் டிஸ்னி தீம் பார்க் ரகசியம்!

வால்ட் டிஸ்னி இதற்கென கொசு கண்காணிப்புத் திட்டம் எனும் வேலையைச் செய்து வருகிறது. கொசு போன்ற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்க எவ்வளவு தூரம் வரை செல்லத் தயாராக இருக்கின்றனர். 

வால்ட் டிஸ்னி

உலகின் மிக முக்கியமான தீம் பார்க்குகளில் ஒன்றான வால்ட் டிஸ்னி தீம் பார்க்கைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். வருடம் முழுக்க குடும்பம், குடும்பமாகப் பலரும் சுற்றிப் பார்க்கும் இடமாக இருக்கிறது வால்ட் டிஸ்னி தீம் பார்க். சொல்லப்போனால் இது வால்ட் டிஸ்னி உலகம் என்றே அழைக்கப்படுகிறது. வால்ட் டிஸ்னியின் கார்டூன் கதாபாத்திரங்களும் அந்த கார்டூன்களின் செட்டப்களையும் இங்கே காண முடியும். இதையெல்லாம்விட இதில் மற்றொரு ஆச்சர்யம் என்னவென்றால் வால்ட் டிஸ்னி தீம் பார்க்கில் கொசுக்களையே பார்க்க முடியாது. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தும் விஷயம். இது எப்படி சாத்தியம் எனப் பலரும் இதற்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தைத் அறிந்துகொள்ள முயன்றனர். ஆனால், தற்போது அந்த ரகசியம் வெளியாகியிருக்கிறது. வால்ட் டிஸ்னி இதற்கென கொசு கண்காணிப்புத் திட்டம் எனும் வேலையைச் செய்து வருகிறது. கொசு போன்ற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்க தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் அவர்கள் செய்யத் தயாராக இருக்கின்றனர். 

அமெரிக்காவில் வால்ட் டிஸ்னி அமைந்திருக்கும் ஃபுளோரிடா மகாணத்தில் நிறைய தீம் பார்க்குகள் அமைந்துள்ளன. மேலும், இந்த மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 29% சதுப்பு நிலங்களால் ஆனது. வால்ட் டிஸ்னி தீம் பார்க்கே சதுப்பு நிலத்தில்தான் அமைந்துள்ளது. 1960-ல் மிகக்குறைந்த விலைக்கு இதை வாங்கியுள்ளனர். கொசுக்களை அழிப்பதற்காகப் பூச்சிக்கொல்லிகளையும் பூச்சிக் கட்டுப்பாட்டையும் ஒரு சேர பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொசு போன்றவற்றைச் சாப்பிடக்கூடிய பூச்சிகள் வளரவும் அனுமதிக்கின்றனர். மேலும் வால்ட் டிஸ்னி தீம் பார்க் முழுவதும் சிறிய அளவிலான கொசுப் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொறிகளின் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடப்படுகின்றன. வால்ட் டிஸ்னி தீம் பார்க்குக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர். இதனால் கொசுவின் மூலம் ஜிகா வைரஸ் போன்ற கொடிய வைரஸ்கள் பரவ வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என வால்ட் டிஸ்னி கூறியுள்ளது.