வெளியிடப்பட்ட நேரம்: 23:03 (09/11/2018)

கடைசி தொடர்பு:10:30 (10/11/2018)

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - ஜனவரி 5-ம் தேதி தேர்தல்!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்த அதிபர் சிறிசேன உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே கடந்த 26-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அதிபர் மைத்திரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். வெளிநாடு, உள்நாடுகளில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு எழுந்தது. அதேநேரம் சபாநாயகர் கரு ஜயசூர்ய, `ரணில் பிரதமராக தொடர்வார்' என அறிவித்தார். இதேபோல் தமிழ் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு என அறிவித்தனர். இதனால் இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவி வந்தது. கடந்த 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜயசூர்ய, அந்நாட்டு எதிர்க்கட்சிகள், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருவழியாக எதிர்ப்புக்குப் பணிந்த சிறிசேன வரும் 14-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்ட, அரசமைப்பின் 70-வது பிரிவு உட்பிரிவு (3) (அ) -வின்படி அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்தார். அப்போது பெரும்பான்மையை ராஜபக்சே நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக எதிர்த் தரப்பிலிருந்து எம்.பி-க்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் மகிந்த - மைத்திரி தரப்பு ஈடுபட்டது. 

இந்தநிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் சிறிசேன என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. இன்று இரவு 8.30 மணி அளவில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவில் அதிபர் சிறிசேன கையெழுத்திட்டார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. நாடாளுமன்றம் கலைப்பைத் தொடர்ந்து இலங்கை விரைவில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அதிபர் சிறிசேன உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க