வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:10:42 (10/11/2018)

பிரிட்டனில் நிறுத்தப்பட்ட அணுமின் நிலைய கட்டுமான வேலைகள்!

அணுமின் நிலையம்
 

பிரிட்டனின் கும்ப்ரியா (Cumbria) மாவட்டத்தில் புதிய அணுமின் நிலையம் ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்ற கனவை ஜப்பானிய நிறுவனமான டொஷிபாவின் அறிக்கை குலைத்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை டொஷிபா நிறுவனம்தான் மேற்கொள்கிறது. இந்த நிலையில், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துகிறோம் என டொஷிபா (Toshiba) நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகளில் இருக்கும் இந்த அணுமின் நிலையத்தை முழுதாக கட்டி முடித்த பிறகு இதை எந்த நிறுவனத்திடம் விற்பது என அரசு உறுதிப்படுத்தவில்லை. மேலும், புதிய வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்காமல் இருப்பதும் இதற்குக் காரணம் என டொஷிபா நிறுவனம் தெரிவித்துள்ளது,  தற்போது 400 மில்லியன் யூரோவுக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.

இப்பொழுதே இந்தக் கட்டுமானத்தை நிறுத்தினால் மேலும் 124 மில்லியன் யூரோவை சேமிக்கலாம் என டொஷிபா கூறியுள்ளது. பிரிட்டனின் ஆற்றல் கொள்கையில் அணுசக்தி மிக முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில் இந்த அணு உலை நிறுத்தப்படுவது முக்கியமான இழப்பாகும். மேலும், நிறைய அணுமின் நிலையங்களைக் கட்டும் எண்ணத்தில் இருக்கும் பிரிட்டன் அரசுக்கு ஏற்பட்ட அடியாகவும் பார்க்கப்படுகிறது. கும்ப்ரியாவில் கட்டப்படும் அணுமின் நிலையம் மூலம் 7% மின்சாரத்தைப் பெறுவதாக இருந்தது. 

இதுகுறித்து பிரிட்டன் கீரின்பீஸ் (GreenPeace) அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜான் சௌவென் (John Sauven) கூறுகையில், அரசின் அணுசக்தி சூதாட்டத்தின் தோல்விக்கு இந்த அணு உலை கட்டுமான நிறுத்தம் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார். உலகம் முழுக்க அணுமின் சக்திக்கு எதிரான வாதங்கள் வலுவாக எழுந்து வரும் நிலையில் இந்த நிறுத்தமும் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.