வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:10:57 (10/11/2018)

``தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சென்னையில் தான் வளர்ந்த நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்தவர் என்றாலும் அவர் வளர்ந்தது சென்னையில்தான். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் சென்னையில் தன் இளமைக்காலத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். ``அன்று என் வாழ்க்கை மிகவும் எளிமையானதுதான், ஆனால் இன்றைக்கு நான் வாழும் உலகத்தோடு ஒப்பிடும்போது அது மிகவும் சிறந்ததாகவே இருந்தது. சென்னையில் நாங்கள் ஒரு சாதாரண வீட்டில்தான் வசித்தோம். தரையில்தான் படுத்து உறங்குவோம். அப்பொழுது கடும் வறட்சிக் காலமாக இருந்தது. அந்தச் சூழ்நிலை எங்களுக்குப் பயத்தைக் கொடுத்தது.

அதனால்தான் இன்றைக்கும் உறங்கும்போது என் தலைக்கு அருகில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ள மறப்பதில்லை. மற்ற வீடுகளில் எல்லாம் குளிர்சாதனப் பெட்டி இருந்தது. ஒரு நாள் அதை வாங்கியபோது பெரிய விஷயமாகத் தெரிந்தது" என்கிற சுந்தர் பிச்சை மேலும் பல தகவல்களையும் தெரிவித்திருக்கிறார். ``அப்பொழுதெல்லாம் கையில் எது கிடைத்தாலும் அதைப் படிப்பேன், சார்லஸ் டிக்கன்ஸ் புத்தங்களைக் கூடப் படித்திருக்கிறேன். நண்பர்கள், தெருவில் கிரிக்கெட் விளையாடுவது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது இப்படித்தான் அன்றைக்கு என் வாழ்க்கை இருந்தது. ஆனால் அதில் நீங்கள் எந்தக் குறையையும் உணர முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.