வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:29 (10/11/2018)

'நான் பைத்தியம்...' கலிபோர்னியா துப்பாக்கிச்சூடு குற்றவாளியின் அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு!

கடந்த 8-ம் தேதி இரவு கலிபோர்னியாவில் ஒரு பாரில் புகுந்து சரமாரியாக சுட்டு 12 பேரை கொலை செய்துவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்ட கொலையாளி ஐயன் டேவிட் லாங்கின் கடைசி ஃபேஸ்புக் பதிவுகள் அதிர்ச்சியில் மக்களை ஆழ்த்தியுள்ளன. 

கலிஃபோர்னியா துப்பாக்கிச்சூடு

``என்னை எல்லாரும் பைத்தியக்காரன் என்று சொல்லுவார்கள். அதில் யாரும் மறுக்காமல் இருக்கப்போவதில்லை!" எனத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நேரத்தில் டேவிட் லாங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 12 பேரை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டு வீழ்த்திய பிறகு ``நான் பைத்தியம்தான். ஆனால், இந்த துப்பாக்கிச்சூடுகளுக்கு பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? நம்பிக்கை தருவது, பிரார்த்தனை செய்வது. இல்லையென்றால் என்னை நினைவு வைத்துக்கொண்டு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கேட்பீர்கள்." என பதிவுசெய்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடந்த நேரத்தில் கொலையாளி டேவிட் லாங்தான் இதை ஃபேஸ்புக்கில் பதிவுசெய்திருக்கிறார் என கலிபோர்னியா போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அமெரிக்காவில் முன்னால் துணை ராணுவப்படை (Marine corps) வீரரான டேவிட் லாங் கடந்த 7-ம் தேதி இரவு பாடர்லைன் பார் அன்டு க்ரில் என்ற இடத்துக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைச் சரமாரியாக சுட்டிருக்கிறார். 

ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஐயன் டேவிட் லாங்இதில் இறந்துபோன 12 பேரில் தற்போது 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  54 வயதான ராஸ் ஹீலஸ் அடுத்த ஆண்டு தனது போலீஸ் பதவியில் இருந்து ஓய்வுபெற இருந்தார். பாடர்லைன் பாரில் துப்பாக்கிச்சூடு நடப்பதாகத் தகவல் தெரிந்தவுடன் முதலில் அந்த இடத்துக்கு வந்த காவலர் இவர்தான். ஐயன் டேவிட் லாங்கை தடுக்க முயன்றபோது அவரால் பலமுறை சுடப்பட்டு இறந்துள்ளார். 58 பேரை பலிவாங்கிய லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்தவர்களில் ஒருவரான டெலிமாகோஸ் ஆர்ஃபெனோஸ் தற்போது இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளார். 

அமெரிக்காவில் 2018-ல் இதுவரை 311 துப்பாக்கிச்சூடுகள் பொது இடங்களில் நடந்துள்ளன. இதில் 300-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என அமெரிக்காவில் கோஷங்கள் கிளம்பியுள்ளன.