வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (10/11/2018)

கடைசி தொடர்பு:19:59 (10/11/2018)

`ஈழத்திலும் அரசியல் வெற்றிடம்!' - யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் பேச்சு!!

இலங்கை திருமாவளவன் மரநடுகை மாதம் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்

வி.சி.க. தலைவர் திருமாவளவன் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். தமிழீழப் பகுதியிலுள்ள வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் கார்த்திகை மாத மரநடுகை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். 

சென்னையிலிருந்து நேற்று கொழும்பு சென்றடடைந்த அவர், இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணமானார். காலையில், யாழ். கனகரத்னம் மகாவித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மரம் ஒன்றை நட்டுவைத்தார். பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில், வடமாகாண மர நடுகை மற்றும் மலர்க்கண்காட்சி விழாவில் பங்கேற்றார். வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேசுவரனும் தொல்.திருமாவளவனும் மங்கலச்சுடரை ஏற்றி நிகழ்ச்சியை சம்பிரதாயமாகத் தொடங்கிவைத்தனர். வட மாகாண விவசாயம், கால்நடை துறைகளின் முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன், தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடப்பு நடப்பு தமிழின அரசியல் நிலவரம் குறித்து உரையாற்றினார். 

திருமா

இந்திராகாந்தி காலத்தில் தமிழீழப் போராளிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட போர்ப்பயிற்சி, ராஜீவ்காந்தி காலத்தில் நடைபெற்ற அசாதாரணமான நிகழ்வுகளைக் குறிப்பிட்ட அவர், ”தற்போது தமிழக அரசியல்சூழலில் வெற்றிடம் இருக்கிறதென்று எப்படி அங்கு விவாதம் நடக்கிறதோ, அப்படி இந்த ஈழ மண்ணிலும் அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், வி.சி.கட்சியின் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்கள் உட்பட்ட 100 பேருக்கு மிதிவண்டிகளையும் இந்நிகழ்வில் திருமாவளவன் வழங்கினார். முன்னதாக, கோயில் வீதியில் உள்ள விக்கினேசுவரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்த திருமாவளவன், 2 மணி நேரம் அவருடன் நடப்பு அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.