வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (11/11/2018)

கடைசி தொடர்பு:16:30 (11/11/2018)

‘எங்களை மன்னித்துவிடுங்கள்’ - நிறுத்தப்பட்டது லயன் ஏர் விமான மீட்புப் பணி

லயன் ஏர் விமானத்தில் இறந்தவர்களைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. 

லயன் ஏர் மீட்புப் பணி

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவுக்குக் கடந்த மாதம் 29-ம் தேதி காலை 6:20 மணிக்கு லயன் ஏர் விமானம் கிளம்பியுள்ளது. புறப்பட்ட அடுத்த 13 நிமிடங்களில் வடகிழக்கு ஜாவா கடலில் விழுந்து நெருங்கியது. முதலில் இந்த விமானம் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டு பிறகு கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகள், விமான ஓட்டிகள் என மொத்தம் 189 பேர் பயணித்துள்ளனர். விமானம் கடலில் விழுந்ததால் இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக மீட்புப் படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

பிறகு விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு என்ஜின் கோளாறு காரணமாக லயன் ஏர் விமானம் செயலிழந்து செங்குத்தாகக் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. இறந்தவரில் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும் கடந்த இரண்டு வாரங்களாக மீதமுள்ளவர்களின் உடல்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில் தங்களின் மீட்புப் பணிகளை நிறுத்திகொள்வதாக இந்தோனேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முகமது ஸியாகி கூறியிருப்பதாவது, ” நேற்று பிற்பகல் முதல் இன்று வரை நடைபெற்ற தேடுதலில் இதுவரை எங்களால் எந்த உடலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் இந்த தேடுதல் பணியைக் கைவிட நாங்கள் முடிவுசெய்துள்ளோம். பொதுமக்களிடமும், குறிப்பாக இறந்தவர்களின் குடும்பத்தினரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.