வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (11/11/2018)

கடைசி தொடர்பு:17:45 (11/11/2018)

சிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே!

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌சே, சுதந்திரக் கட்சியில் இருந்து இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சியில் இணைந்திருக்கிறார். 

ராஜபக்‌ஷே

மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்‌சேவும் சுதந்திரக் கட்சியில் இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்தனர். 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அதிபர் பதவி தொடர்பாக இருவருக்கும் சிறு மோதல் ஏற்பட்டது. பின்னர் சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கேவும் இணைந்து இலங்கையில் ஆட்சி அமைத்தனர். சிறிசேன அதிபராகவும், ரணில் பிரதமராகவும் பதவியேற்றனர். 

இந்நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிசேனவுக்கும் ரணிலுக்கும் காரசாரமான உரையாடல் இடம்பெற்ற தகவல் அந்நாட்டு ஊடகங்களில் கசிந்தது. அதன்பிறகு 26-ம் தேதி ராஜபக்‌சேவை அந்நாட்டு பிரதமராக பதவி பிரமாணம் செய்துவைத்தார் சிறிசேன. இலங்கையின் பிரதமராக ராஜபக்‌சே நியமிக்கப்பட்டதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் உள்பட பல நாடுகளும் கண்டம் தெரிவித்தன. இந்த விவகாரம் இலங்கை அரசியலில் பூதாகரமானது. இதனால், நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அதிபர் சிறிசேனவுக்கு சர்வதேச நெருக்கடி அதிகரித்தது. பரபரப்பான சூழலில், இலங்கை நாடாளுமன்றம் 14ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீர் திருப்பமாக இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக மைத்திரியபால சிறிசேன கடந்த 9ம் தேதி அறிவித்தார். 

இந்நிலையில், இன்று காலை தான் முன்னதாக இருந்த சுதந்திர கட்சியில் இருந்து  இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சிக்கு மாறியுள்ளார் மகிந்த ராஜபக்சே. அவருடன் அவரின் மகன் நமல் ராஜபக்‌சே உள்பட ஆதரவாளர்கள் பலரும் அவருடன் பொதுஜன கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு ராஜபக்‌சே உறுப்பினர் அட்டையை வழங்கினார். ‘மைத்திரியபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்‌சே தலைமையில் பல கட்சிகளை இணைத்துப் பரந்த கூட்டணியை உருவாக்கி, வரும் பொது தேர்தலை நாங்கள் எதிர்கொள்ளவுள்ளோம்” என நமல் ராஜபக்‌சே ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.