வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (12/11/2018)

கடைசி தொடர்பு:16:26 (12/11/2018)

6,000 ஆண்டுகளுக்கு முந்தைய பூனைகள்! - எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு கல்லறைகள்

கிப்தில் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூனைகள், பதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

பூனை எகிப்து

அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் யாரேனும் மறைந்துவிட்டால், அவர்களின் உடலை அழுகிப் போகாமல் பாதுகாக்கப் பதப்படுத்தி வைப்பதற்காக `எம்பாமிங்' (Embalming) முறையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், எகிப்தியர்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி பிரமிட் குகைக்குள் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எகிப்து நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிலர் தெற்குப் பிரமிடு பகுதியில் ஆராய்ச்சியை நடத்தினர். ஆய்வு முடிவில் பிரமிடைச் சுற்றி ஏழு கல்லறைகளைக் கண்டுபிடித்தனர். `ஒவ்வொரு கல்லறையும் சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பு இருந்தவை' எனத் தெரிவித்துள்ளனர். அந்த ஏழு கல்லறைகளில் மூன்று கல்லறைகளில் பதப்படுத்தப்பட்ட பூனைகள், வண்டுகள் போன்றவை இருந்துள்ளதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதை அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்தப் பூனைகளும் மனிதர்களைப் போலவே பதப்படுத்தப்பட்டு அவற்றின் மீது துணிகள் சுற்றப்பட்டுக் காணப்படுகின்றன. இதேபோன்று கல்லால் உருவாக்கப்பட்டுள்ள சதுரமான பெட்டியில் இருந்து பதப்படுத்தப்பட்ட வண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், வெண்கலத்தால் ஆன பூனை சிலைகள், மரத்தால் செய்து தங்க முலாம் பூசப்பட்ட சிங்கம், பசு உட்பட ஆயிரம் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. `அந்தக் காலத்தில் வாழ்ந்த எகிப்து மக்கள் பூனைகளை தெய்வமாக வழிப்பட்டிருக்கலாம்' என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.