வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (13/11/2018)

கடைசி தொடர்பு:16:30 (14/11/2018)

உயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்!‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்

சீனாவில் விபத்தில் பலியான தன் எஜமானுக்காக 80 நாள்களாக அதே இடத்தில் காத்திருக்கிறது ஒரு விசுவாசமான நாய். 

நாய்

வீடுகளில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் முக்கியமானது நாய். குடும்பத்தில் ஒருவராகவே பல வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. ஏனெனில் அவை நன்றியுடையது. வீட்டைப் பாதுகாப்பது போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ஒவ்வொருவருக்கும் நாய்கள் குறித்த ஒரு கதை நிச்சயம் இருக்கும். நாய்கள் குறித்த நிகழ்வுகள் எல்லாம் நெகிழவைப்பவை. அதில் ஒன்றுதான் சீனாவில் நடந்துள்ள இந்தச் சம்பவம். 

சீனாவின் ஹோட் நகரில் வசிக்கும் பெயர் தெரியாத ஒரு பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அந்தப் பெண் இறந்த பிறகு அவர் வளர்த்துவந்த நாய் சாலை விபத்து நடந்த அதே இடத்தில் தன் எஜமானுக்காகத் தினமும் காத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பெண் இறந்து 80 நாள்கள் ஆன நிலையிலும் ஒருநாள் விடாமல் அந்த நாய் அதே இடத்தில் தவமிருக்கிறது. இந்த விசுவாசமான நாயின் வீடியோ சீன இணையத்தில் வெளியாகி பலரின் கண்ணீரைச் சம்பாதித்துள்ளது. மேலும் அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டது. 

இது பற்றி பி.பி.சி ஊடகத்துக்குப் பேட்டியளித்த அப்பகுதியில் இருக்கும் டாக்ஸி டிரைவர் ஒருவர், `` இந்த நாய் தினமும் தவறாமல் இங்கு வந்து தன் எஜமானுக்காகக் காத்திருக்கும். இவ்வழியாக வரும் என்னைப் போன்ற டாக்ஸி ஓட்டுநர்கள் அதற்குச் சிறு உணவு மட்டுமே வழங்குவார்கள். அந்த நாயைத் தூக்கி பாதுகாக்கலாம் என அருகில் சென்றால் அது யார் கையிலும் சிக்காமல் பயந்து ஓடிவிடும். ஆனால், தினமும் இந்த நாயை நான் இங்கே பார்ப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று 1872-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஒரு நாய் தன் எஜமானை அழைத்துச் செல்ல தினமும் பேருந்து நிலையம் வருமாம். ஆனால், எஜமான் இறந்த பிறகும் அந்த நாய் தினமும் அதாவது 14 ஆண்டுகளாக அதே பேருந்து நிலையத்தில் வந்து காத்திருந்துள்ளது. இதன் விசுவாசத்தைப் பாராட்டி அந்த நாய்க்கு அதே பேருந்து நிலையத்தில் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாம் சிலரை திட்ட வேண்டும் என்றால் நாய் என்ற வார்த்தையை உபயோகிப்போம். இதுபோன்ற சில நெகிழ்ச்சி செய்திகளைக் கேட்டால் நாயை என்ற வார்த்தையை திட்டுவதற்கு பயன்படுத்த வேண்டாமே என்றுதான் தோன்றுகிறது.