வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (14/11/2018)

கடைசி தொடர்பு:08:19 (14/11/2018)

‘சீட்டுக்கட்டுபோல் சரிந்த நடைபாதை!’: விபத்தில் சிக்கிய சீனப்பெண்

நடைபாதை


சீனாவில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் விபத்தில் சிக்கினார். சமூக வலைதளத்தில் வெளியான இந்தக்காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் சாலைதான். நீங்கள் அதில் பலமுறை பயணம் மேற்கொண்டிருக்கலாம். திடீரென அந்தச் சாலை உங்களை உள்வாங்கினால் எப்படி இருக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் சீனாவில் நடந்துள்ளது. பெண் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். சீட்டுக்கட்டுகள் போல் நடைபாதை சரிந்து பூமிக்குள் விழுகிறது. அந்தப்பெண் அதில் சிக்கிக்கொள்கிறார். நல்லவேளையாக அதுமிகப்பெரிய பள்ளமாக இல்லை. நடைபாதைக் கற்கள் அந்தப்பெண்ணின் மீது விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டது. இச்சம்பவத்தைக் கண்ட பொதுமக்களும் அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளும் அந்தப் பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் சீனாவில் கடந்த நவம்பர் 11-ம் தேதி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சீனாவில் வைரலாகி வருகிறது. பல்வேறு மக்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் சிலர் நன்றி தெரிவித்துள்ளனர்.