வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (14/11/2018)

கடைசி தொடர்பு:11:16 (14/11/2018)

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி! பிரதமர் பதவியை இழக்கிறார்

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் பதவியை அவர் இழக்க உள்ளதாக தெரிகிறது.

ராஜபக்‌ஷே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமகிங்கே உடனான கருத்து மோதலை அடுத்து அந்நாட்டு அதிபர் மைத்ரிய சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலை ஜனவரியில் நடத்தவும் கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார். அதை எதிர்த்து அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த இரண்டு நாள்களாக விசாரித்து நேற்று இலங்கை அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், அதிபரின் உத்தரவை அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தனர். 

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்குப் பிறகு, முன்னதாக அதிபர் மைத்திரி அறிவித்திருந்தபடி நவம்பர் 14 அன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அலுவலகம் நேற்று தெரிவித்தது. அதற்கு முன்னதாக, காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தைச் சபாநாயகர் கரு ஜயசூர்யா கூட்டியுள்ளார். 

மேலும், இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் இலங்கை அதிபர் மைத்திரி கலந்துகொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலை நாடாளுமன்றம் வந்த ராஜபக்‌சே முதலில் தன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் வந்திருந்த ரணில் ஆதரவாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் முதலில் ராஜபக்‌சே மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. இதையடுத்து, ராஜபக்‌சே நாடாளுமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார். அங்கு கூச்சல் அதிகமானதை அடுத்து இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் திடீரென ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ராஜபக்‌சே தோற்கும் நிலை உருவாகியுள்ளது இதன் காரணமாகவே அங்கு கூச்சல் நிலவிவருவதாக கூறப்பட்டுள்ளது. 

ராஜபக்‌சே வெளியேறிய நிலையில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் அவருக்கு எதிரான தீர்மானம் வெற்றியடைந்துள்ளது. ராஜபக்‌சே பதவி இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.