ஒயினுக்காக நீடித்த 40 நிமிட ரகளை! - ஏர் இந்தியா விமானத்தை கதிகலக்கிய பெண் | Air India Passenger Fight with Crew Members

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (14/11/2018)

கடைசி தொடர்பு:17:20 (14/11/2018)

ஒயினுக்காக நீடித்த 40 நிமிட ரகளை! - ஏர் இந்தியா விமானத்தை கதிகலக்கிய பெண்

ஏர் இந்தியா விமானத்தில் கூடுதலாக ஒயின் கேட்டு கிடைக்காத ஆத்திரத்தில் பயணி ஒருவர் விமானப் பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஒயின்


மும்பையிலிருந்து லண்டனுக்கு கடந்த 10-ம் தேதி ஏர் இந்தியா விமானம் சென்றுள்ளது. விமானத்தில் அயர்லாந்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பயணம் மேற்கொண்டுள்ளார். பிசினஸ் க்ளாஸ் வகுப்பில் பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மது கொடுப்பது வழக்கம். அந்தப் பெண் தனக்கு மது வேண்டும் என விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் அனுமதிக்கப்பட்ட அளவிலான மதுவை வழங்கியுள்ளனர். இதன் பிறகு தனக்கு கூடுதல் மது வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டிவிட்டதால் கூடுதலாக மது கொடுக்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர். தனது இருக்கையைவிட்டு எழுந்த அந்தப் பெண் அனுமதியில்லாமல் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த மதுவை அருந்தியுள்ளார். இதை விமான ஊழியர்கள் தடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், ஏர் இந்தியா ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 40 நிமிடங்களுக்கும் மேலாக அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 4 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ‘நான் யார் என்று தெரியுமா. உங்களுக்காகத்தான் சர்வதேச அளவில் குரல் கொடுக்கிறேன். ரோஹிங்யா... (மோசமான வார்த்தைகள்) மக்களுக்காக, ஆசியர்களுக்காக வாதாடுகிறேன். அதற்காக நான் பணம்கூட வாங்குவதில்லை. ஆனால், எனக்கு ஒரு கோப்பை ஒயினைக்கூட உங்களால் தர முடியாதா'' என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.