`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்! | Sikhs in america sends letter to the governor over the release of 7 convicts in rajiv case

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (15/11/2018)

கடைசி தொடர்பு:08:03 (15/11/2018)

`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்!

அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சீக்கியர்கள்

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநில சட்டமன்றத்தில் 34-வது சீக்கிய இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான சீக்கிய ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து, தமிழகத்தில் 26 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க கோரி சீக்கியர்கள் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில், ``முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

அமெரிக்கா

இந்தக் கொலைவழக்கு தொடர்பான விசாரணையில் பல்வேறு முரண்பட்ட தகவல்களை, விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, அவர்கள் 7 பேரையும், விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் இணைய வழிவகை செய்ய வேண்டும். இது எங்களுடைய விருப்பம் மட்டுமில்லை. மாறாக நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரை பின்பற்றும் ஏராளமான மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கனவும்கூட. பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் வழங்கிய மனுவை நீங்கள் பரீசிலிப்பிர்கள் என நம்புகிறோம். அதேபோல, தமிழக அமைச்சரவை சார்பில் 7 பேரை விடுவிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கார்த்திகேய பிரபு நாகராஜன், ஜெயகணேஷ், கார்த்திகேயன் தெய்வீகராஜன் மற்றும் சபரீஷ் ரகுபதி ஆகியோர் கவர்னர் நடவடிக்கை எடுக்க கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.