வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (15/11/2018)

கடைசி தொடர்பு:11:36 (15/11/2018)

ரணில் - ராஜபக்சே எம்.பி-க்கள் மோதல்; சபாநாயகர் மீது தாக்குதல்! - போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்

ராஜபக்‌சேவை பிரதமராக ஏற்க முடியாது என அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் மோதல் நிலவி வருகிறது. 

இலங்கை

இலங்கையில் கடந்த மாதம் 26-ம் தேதியன்று திடீரென நாடாளுமன்றத்தை முடக்கிவைத்து அதிபர் மைத்திரி உத்தரவிட்டார். நவம்பர் 14-ம் தேதியன்றுதான் நாடாளுமன்றம் கூடும் என்றும் அவர் அறிவித்தார். மறுநாளே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகள் மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. 

முன்னதாக அறிவித்தபடி இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அதில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான எம்.பி-க்கள் அனைவரும் ராஜபக்‌சே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கூச்சலிட்டனர். இதையடுத்து ராஜபக்‌சே அவரது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்‌சே தோல்வியடைந்தார். மேலும், நேற்றைய கூச்சல் குழப்பத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

PhotoCredits : Twitter/@cvrchathu

அதன்படி இன்று காலை கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா, நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்‌சே தோல்வியடைந்துவிட்டார். அதனால் அவரை பிரதமாக ஏற்க முடியாது என அறிவித்தார். இதை எதிர்த்த ராஜபக்‌சே தரப்பு எம்.பி-க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ரணில் ஆதரவு எம்.பி-க்களுக்கும் ராஜபக்‌சே ஆதரவு எம்.பி-க்களுக்கும் இடையே கைகலப்பு நிலவியது.

ரணில் விக்ரமசிங்கேவின் அழுத்தத்தினால்தான் சபாநாயகர் இவ்வாறு கூறுகிறார் என ராஜபக்‌சே ஆதரவு எம்.பி-க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டார். இருந்தும் அவரின் முயற்சி பலனளிக்கவில்லை. அனைத்து எம்.பி-க்களும் எழுந்து போராட்டம் நடத்துவதால் இலங்கை நாடாளுமன்றமே போர்க்களமாக மாறியுள்ளது. உச்சகட்ட பரபரப்பினால் நாடாளுமன்றம் வரும் 21-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிபர் மைத்திரி பால சிறிசேன கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.