`ஜன்னல் இருக்கைதான் வேணும்!’ - அடம்பிடித்த பயணிக்கு விமான நிறுவனம் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ் | The flight attender gave a hand draw window to the passenger we ask for window seat

வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (16/11/2018)

கடைசி தொடர்பு:18:41 (16/11/2018)

`ஜன்னல் இருக்கைதான் வேணும்!’ - அடம்பிடித்த பயணிக்கு விமான நிறுவனம் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்

விமானத்தில் ஜன்னலோர இருக்கை வேண்டும் என்ற பயணிக்கு விமான சேவையாளர் உடனடியாகச் செய்து கொடுத்த ஜன்னல் படம் இணையத்தில் வைரலாகியது. 

விமான சேவையாளர் அளித்த ஜன்னல் படம்

விமானத்தில் பயணம் செய்வது பொதுவாக அனைவரும் பிடித்தமான ஒன்றுதான். அதுவும் ஜன்னல் ஓர இருக்கையில் அமைர்ந்துகொண்டு மேகங்களுக்கிடையே புகுந்து செல்லும் காட்சியை ரசித்தபடி செல்வது பலருக்குப் பிடித்த ஒன்றுதான். பலர் டிக்கெட் புக்கிங் செய்யும்போதே ஜன்னல் ஓரத்தில் தங்களுக்கு இருக்கை வரும்படியாகப் புக்கிங் செய்வார்கள். 

ஜப்பானில் கடந்த சில நாள்களுக்கு முன்னால், விமான பயணி ஒருவர், ஜன்னல் ஓரத்தில் இருக்கை வரும்படியாக விமான டிக்கெட்டை வாங்கியுள்ளார். ஆனால், விமானத்தில் வந்து அமரும்போது, தனது இருக்கைக்கு அருகில் ஜன்னல் இல்லாததைப் பார்த்து கடுப்பானார். அப்போது விமானத்தில் பயணிகளுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டபடி வந்துகொண்டிருக்கிறார் விமான சேவையாளர் ஒருவர். இதற்கு, ``எனக்கு இங்கு ஜன்னல் இருக்கை வேண்டும்” என கடுப்புடன் பதிலளித்துள்ளார். 

முதலில் அவரது பதிலில் அதிர்ந்த சேவையாளர், அங்கிருந்து நகர்ந்துவிட்டார். சிறு இடைவெளிக்குப் பின்னர் கையில் ஒரு பேப்பருடன் திரும்பிய அந்தச் சேவையாளர், தனது கைகளால் விமான ஜன்னல் போன்ற ஒன்றை வரைந்து அவர் பக்கத்தில் ஒட்டியுள்ளார். அதில் மேகங்களும் கடல் நீரும் இருப்பதுபோல் வரையப்பட்டிருந்தது.

இதைக் கவனித்த மற்றொரு பயணி, அதைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். பதிவிட்ட சில நிமிடங்களிலே, இந்தப் புகைப்படம் வைரல் ஆனது. அந்தப் புகைப்படத்தில், ஜன்னல் இருக்கை கேட்டப் பயணி, ஜன்னல் ஓவியத்துக்கு அருகில் தூங்கிக்கொண்டிருப்பார். இதைக் கவனித்த நெட்டிசன்கள், `தனக்கு ஜன்னல் ஓர இருக்கை கிடைத்ததில் அவருக்கு திருப்தி போலிருக்கிறது. அந்த திருப்தியில்தான் அவர் அசந்து தூங்குகிறார்’ என்று பதிவிட்டுள்ளனர்.