வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/11/2018)

கடைசி தொடர்பு:06:00 (18/11/2018)

கலிஃபோர்னிய காட்டுத்தீ ஏற்பட அதிகாரிகளே காரணமா...? - கொதிக்கும் டிரம்ப்

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ வழக்கமாக ஏற்படுவதுதான். இருப்பினும் இந்தமுறை ஏற்பட்ட இந்த விபத்து கடந்த நூற்றாண்டின் மிகக் கடுமையான காட்டுத்தீ.

வடக்கு காலிஃபோரினியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பல சேதங்களை விளைவித்துள்ளது.  இன்றைய நிலவரப்படி ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர். சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து 280கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சியர்ரா மலைத்தொடர். அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 71 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இன்று வெளியான இந்த அதிர்ச்சித் தகவல்களைத் தொடர்ந்து கலிஃபோர்னியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

சுமார் 27,000 மக்களின் குடியிருப்புகள் அங்கு அமைந்திருந்தன. அவையனைத்தும் 8-ம் தேதி அங்கு ஏற்பட்ட பெரிய அளவிலான காட்டுத்தீக்கு இரையாகிவிட்டது. கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ வழக்கமாக ஏற்படுவதுதான். இருப்பினும் இந்தமுறை ஏற்பட்ட இந்த விபத்து கடந்த நூற்றாண்டின் மிகக் கடுமையான காட்டுத்தீ. இந்த அளவுக்குச் சேதங்களை விளைவித்த காட்டுத்தீ இதற்குமுன் 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மின்னசோடாவில் ஏற்பட்டது. அதில் 450 பேர் இறந்தனர். அதற்குப் பிறகு அந்த அளவுக்கு ஏற்பட்டது இதுதான். இத்தகைய கொடிய விளைவுகள் ஏற்படுவதற்கு அஜாக்கிரதையாக இருந்த அதிகாரிகளே காரணமென்று டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

டிரம்ப் பார்வையிடப்போகும்  பகுதி

இந்தப் பெரியளவிலான சேதங்களைத் தொடர்ந்து (கலிஃபோர்னிய நேரப்படி சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு) அப்பகுதியை பார்வையிட அமெரிக்க அதிபர் டிரம்ப், கலிஃபோர்னியா விரைந்துள்ளார். கலிஃபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் உடன் இணைந்து இடம்பெயர்ந்தவர்களின் வசிப்பிடங்களுக்கும் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கும் பார்வையிடவுள்ளார். இப்போதைய கணக்கின்படி சுமார் 60,000 ஹெக்டேர் அளவிலான வனப்பகுதிக்குக் காட்டுத்தீ பரவியுள்ளது. மனித இழப்புகள் உட்பட, பெருமளவிலான பொருள் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீ ஏற்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் முழுவீச்சில் போராடியும்கூடத் தற்போதுதான் 55% காட்டுத்தீயைக் குறைத்துள்ளார்கள்.