வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (19/11/2018)

கடைசி தொடர்பு:11:00 (19/11/2018)

`எழுத்தாளருக்கு வந்த மொட்டைக் கடிதம்!’ - 6 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட பிகாசோ ஓவியம் #TetedArlequin

கடந்த 2012-ம் ஆண்டில், நெதர்லாந்தில் திருடப்பட்ட பிகாசோ வரைந்த ஓவியம், 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ரோமானியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மிரா பெடிகு

Photo: Mirafeticu

உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ வரைந்த ஓவியங்கள், நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உள்ள குன்ஸ்தால் அருங்காட்சியகத்தில் (Kunsthal Museum) காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த அருங்காட்சியகத்தில், கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளையின்போது, பிகாசோவின் "Tete d'Arlequin’’ என்று பெயரிடப்பட்ட ஓவியம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த ஓவியத்தை ரோமானியா நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்திருக்கலாம் என்று கருதப்பட்டது. 

இந்தக் கொள்ளைகுறித்த விசாரணையின் முடிவில், ரோமானியாவைச் சேர்ந்த கொள்ளையர்கள், கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால், அந்த ஓவியம் இருக்கும் இடம்குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 
இந்த நிலையில், ரோமானியாவின் புகாரெஸ்ட் நகரில் உள்ள நெதர்லாந்து தூதரகத்துக்கு வந்த பெண்மணி ஒருவர், பிகாசோவின் ஓவியம் கிடைத்துவிட்டதாகக் கூறி ஓவியத்தை ஒப்படைத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் மிரா பெடிகு (Mira Feticu) என்பதும், அவர் ரோமானியாவில் பிறந்த டச்சு எழுத்தாளர் என்பதும் தெரியவந்தது. குன்ஸ்தால் அருங்காட்சியகத்தில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற திருட்டுகுறித்து அவர் எழுதிய நாவல், `நூற்றாண்டின் திருட்டு’ என்ற தலைப்பில் டச்சு ஊடகங்களில் பெருமளவு விவாதிக்கப்பட்டதாகும்.

பிகாசோ ஓவியம்

அவர் கூறுகையில், ``குன்ஸ்தால் அருங்காட்சியத்தில் திருடப்பட்ட பிகாசோ ஓவியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்குறித்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று தேடிப்பார்த்தேன். அந்தப் பகுதியில் உள்ள மரத்தின் அடியில், பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றி, இந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. திருடப்பட்ட பிகாசோவின் ஓவியம், 6 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். ரோமானியாவில் பிகாசோ ஓவியத்தைத் தேடிவருவதாக, மிரா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். 

பிகாசோவின் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டதை ரோமானிய அரசும் உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து விசாரித்துவரும் Directorate for Investigating Organized Crime and Terrorism (DIICOT) அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட 7 ஓவியங்களுள் ஒன்றான பிகாசோவின்  "Tete d'Arlequin’’ ஓவியம், ரோமானியாவின் டுல்சீயா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மதிப்பு 905,000 அமெரிக்க டாலர்களாகும் (இந்திய மதிப்பில், தோராயமாக ரூ.6.5கோடி). ரோமானியா அதிகாரிகளின் கஸ்டடியில் இருக்கும் அந்த ஓவியம்குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.