வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (20/11/2018)

கடைசி தொடர்பு:16:22 (20/11/2018)

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் தலைவராக சென்னை மாணவி ஸ்ருதி தேர்வு!

புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹார்வர்ட் பல்கலை மாணவி ஸ்ருதி பழநியப்பன்

ஹார்வர்டு பல்கலைக்கழக இளநிலை மாணவர்கள் தேர்தல் மையம் இதை அறிவித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஸ்ருதி பழனியப்பன் போட்டியிட்டார். இவரின் அணி சார்பாக ஹூஷா என்பவர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நடைன் எம்.கூரி மற்றும் அர்னவ் அகர்வால் ஆகியோர் இவர்களை எதிர்த்துப் போட்டியிட்டனர். தேர்தலில் ஸ்ருதி அணிக்கு 41.5 சதவிகித ஓட்டுகளும் எதிர் அணிக்கு 26.6 சதவிகித ஓட்டுகளும் கிடைத்தன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல மாற்றுவதுதான் லட்சியம் என்று கூறி ஸ்ருதி பழனியப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்த வாக்குறுதிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்ருதி, ``மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்டுவது, மனதளவில் பிரச்னைகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார் செய்வது பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல்ரீதியான தொல்லைகளைத் தடுப்பது, மாணவர்களின் சமூகப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது , பாலியல் சமத்துவத்தை எட்டுவது போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றப் போகிறேன்'' என்றார். 

சென்னையைச் சேர்ந்த ஸ்ருதியின் பெற்றோர் 1992-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகம் கடந்த 1636-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமெரிக்காவின் பழைமையான பல்கலைக்கழகங்களுக்குள் ஒன்று.

நீங்க எப்படி பீல் பண்றீங்க