வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (20/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (20/11/2018)

கௌதமாலாவை மிரட்டும் `நெருப்பு எரிமலை’! - ஒரே நாளில் 4000 பேர் வெளியேற்றம்

எரிமலை

கௌதமாலாவின் ஆன்டிகுவா நகரில் மீண்டும் ஃபியூகோ எரிமலை (Fuego volcano) வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. நெருப்பு எரிமலை என்று அழைக்கப்பட்டும் ஃப்யூகோ எரிமலை, இந்த வருடத்தில் மட்டும் ஐந்தாவது முறையாக இந்த எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னதாக நான்கு முறை வெடித்ததில் ஜூன் மாதம் நிகழ்ந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு இன்னும் கௌதமாலாவில் இருக்கிறது. அந்த எரிமலை வெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 230-க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயினர். ஏறக்குறைய 8,500 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் அழிந்து போயின. அப்பொழுதே நிறைய மக்கள் தங்களது இருப்பிடங்களைக் காலி செய்துவிட்டு வெளியேறினர். ஜூன் மாதம் நிகழ்ந்த எரிமலை வெடிப்பின்போது கௌதமாலாவின் பேரிடர் ஆபத்தைக் குறைப்பதற்கான குழுவின் மீது புகார்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் முன்னெச்சரிக்கையாக மக்களை வெளியேற்றவில்லை என்றும் அதனால்தான் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பலரும் கூறினர்.

தற்போது எரிமலை வெடிப்பு ஆரம்பித்த உடனே மக்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டனர். எரிமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமையின் பின்னிரவில் இருந்தே மக்கள் இருப்பிடங்களைக் காலி செய்ய ஆரம்பித்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 4000-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்துள்ளனர். 2000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆபத்தைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் எரிமலை வெடிப்புகள் உறுதியாகி வருகின்றன. எரிமலை வெடிப்புகள் ஏறக்குறைய 3000 அடிக்கு மேல் இருக்கும் என அச்சத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால் ஏற்படும் சாம்பல்களும் எரிமலைக் குழம்பும் பல மைல் தூரம் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.