வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (21/11/2018)

கடைசி தொடர்பு:15:39 (21/11/2018)

பிரிவினையை ஏற்படுத்துவதாக தஸ்தயேவ்ஸ்கியின் நாவலுக்கு குவைத் தடை!

வளைகுடா நாடுகளில் காணப்படும் பழைமைவாதப் போக்குகளின் காரணமாகப் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு அங்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தஸ்தயேவ்ஸ்கியும் இணைந்துள்ளார்.

படைப்புகளுக்குத் தடைவிதிப்பது என்பது உலகம் முழுவதுமே பொதுவான ஒரு குணமாக இருக்கிறது. குறிப்பாக, மத நம்பிக்கை, அரசுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட படைப்புகள் எனும்போது, அந்தப் படைப்புக்கு மட்டுமல்ல, படைப்பாளிக்கே தடைவிதிக்கும் சூழல் பல நாடுகளில் காணப்படுகிறது. தற்போது குவைத்தில் தஸ்தயேவ்ஸ்கிக்கும், அவரது படைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஸ்தயேவ்ஸ்கி


குவைத்தில் 43-வது சர்வதேசப் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல் உட்படக் கிட்டத்தட்ட 1,000 புத்தகங்களை அந்த நாடு தடை செய்துள்ளது.

கடமசோவ் சகோதரர்கள் - தஸ்தயேவ்ஸ்கிகுவைத் சர்வதேச இலக்கியத் திருவிழாவின் தலைவரான சாத் அல்-அன்ஷி ``தகவல்தொடர்புத் துறையால் இந்த ஆண்டு இலக்கியத் திருவிழாவில் தஸ்தயேவ்ஸ்கியின் `கரமசோவ் சகோதரர்கள்’ நாவல் உட்பட 900-க்கும் அதிகமான நாவல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல் 19-ம் நூற்றாண்டில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. இந்த நாவல் தனிமதச் சுதந்திரம், சமூக அறம் போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்புகிறது. இது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்வதுபோல இருக்கின்றது. எனவே இந்த நாவலுக்கும் இந்த நாவல் ஆசிரியரின் பிற படைப்புகளுக்கும் குவைத் அரசு தடைவிதிக்கிறது” என்று தடைக்கான காரணத்தைக் கூறினார்.

வளைகுடா நாடுகளில் காணப்படும் பழைமைவாதப் போக்குகளின் காரணமாகப் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு அங்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தஸ்தயேவ்ஸ்கியும் இணைந்துள்ளார்.

குவைத் தகவல்தொடர்புத்துறை அமைச்சகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் 4,000-க்கும் அதிகமான புத்தகங்களைத் தடை செய்துள்ளது. இவற்றில் விக்டர் ஹ்யூகோவின் புகழ்பெற்ற நாவலான `தி ஹஞ்ச்பேக் ஆஃப் நோட்ரே டேம்’ மற்றும் காபிரியேல் கார்சியா மார்க்வெஸ்ஸின் `ஒன் ஹண்டர்டு இயர் ஆஃப் சாலிட்டியூட்’ ஆகிய நாவல்களும் அடக்கம். தடை செய்யப்பட்ட அனைத்து நூல்களின் பெயர்களும் நவம்பர் 24 வரை புத்தகத் திருவிழாவில் குவைத் நாட்டின் தணிக்கை விதிகளுக்குட்பட்டுத் திரையில் காண்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தணிக்கைக் குழு, குவைத்தின் பத்திரிகை மற்றும் பதிப்பகங்களுக்கான சட்டம் 2006-ன் படி செயல்படுகிறது. `இஸ்லாமிய மதத்தை இழிவு செய்யும் வகையிலும், குவைத்தின் சட்ட விதிகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் வகையிலும், நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும், நாட்டின் அமைதியைக் கெடுக்கும் வகையிலும், முறையற்ற கருத்துகளை, செய்திகளை வெளியிடுவதோ, படைப்புகளை உருவாக்குவதோ தண்டனைக்குரியது’ என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஸ்தயேவ்ஸ்கி


1970 - 80 வரையிலான காலகட்டத்தில் மத ரீதியிலான படைப்புகளுக்கான முக்கிய இடமாக குவைத் இருந்தது. அதுமட்டுமல்ல, அரேபிய நாடுகளில் பிரபலமான அல்-அரபி என்ற இதழின் பிறப்பிடமாகவும் குவைத் இருந்தது. இந்த இதழ் அரேபிய பண்பாட்டை உலகத்துக்கு எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த இதழாகத் திகழ்ந்தது.  இது தவிர பல முக்கியமான அறிவியல்சார் நூல்களின் பிறப்பிடமாகவும் இருந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக முற்போக்குக் கருத்துகள்கொண்ட நூல்கள் தடை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. `மதம் சார்ந்த பிற்போக்குவாதிகளும், பழங்குடித் தலைவர்களும் குவைத் நாடாளுமன்றத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் முற்போக்குக் கருத்துகள்கொண்ட படைப்புகள் இங்கே தடை செய்யப்படுகிறது’ என்று பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் குமுறுகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்