வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (21/11/2018)

கடைசி தொடர்பு:15:11 (21/11/2018)

தோழியின் புகாரால் நிலைகுலைந்த குடும்பம்!- செல்ஃபியால் 90 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பிய வாலிபர்

அமெரிக்காவில்,  99 வருட சிறைத்தண்டனையிலிருந்து ஒருவர் செல்ஃபியால் தப்பித்த சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது. 

தண்டனையில் இருந்து தப்பிக்க உதவிய செல்ஃபி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த வாலிபர், கிறிஸ்டோபர் பிரிகோபியா. அமெரிக்காவின் ஜார்ஜ் டவுனில் வேலைசெய்துவருகிறார். இவரை, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்தபோது திடீரென போலீஸ் கைதுசெய்தது. ஏன் கைதுசெய்யப்பட்டிருக்கிறோம் எனத் தவித்த கிறிஸ்டோபருக்கு, கைதுக்கான காரணமாக போலீஸார் சொன்னது அதிரவைத்தது. பள்ளிக் கால தோழியை வீடு புகுந்து தாக்கியதாகவும், அவரின் கழுத்தில் கத்தியைக்கொண்டு கீறி, குறியீடு வரைந்த குற்றத்துக்காகவும்,  தோழி ஒருவர் அளித்த புகாரின் பேரிலேயே கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், `தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட தினத்தில் நான் வீட்டில் இருந்தேன்' எனக் கதறியவரின் விளக்கத்தைக் கேட்காமல், அவரை சிறையில் அடைந்த காவல் துறை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 99 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும் என எச்சரித்தனர். ஆனால், அவரின் பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாடினர். ஒன்பது மாதம் சிறையில் இருந்த அவரை ஜாமீனில் வெளியில் எடுத்தனர்.

அதேநேரம், சட்டப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய அவர்களுக்கு, நீதிமன்றத்தில் தன் மகன் குற்றவாளி அல்ல என நிரூபிக்க உதவியது ஒரு செல்ஃபி போட்டோ. ஆம், கடந்த வருடம் செப்டம்பர் 20-ம் தேதி சம்பவம் நடந்ததாக அந்தப் பெண் புகார் கொடுத்தார். அதே தினத்தில், அதே நேரத்தில், சம்பவம் நடந்த இடத்துக்கு 65 மைலுக்கு அப்பால், தன் தாய் மற்றும் குடும்பத்துடன் இருந்துள்ளார் கிறிஸ்டோபர். இதற்கு ஆதாரமாக, இவர்கள் அந்த நேரத்தில் குடும்பத்துடன் செல்ஃபி ஒன்றை எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இதை ஆதாரமாக வைத்து வாதாடிய வழக்கறிஞர்கள், கிறிஸ்டோபரை 99 வருட சிறைத்தண்டனையிலிருந்து வெளிகொண்டுவந்தனர். இதை முன்னிட்டு, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவரின் தாயார் எரினா, ``தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் அனைவருக்கும் நீதி வேண்டிப் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். இது இங்கே முடிவுக்கு வரவில்லை. நாங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தப் போராடுவோம்" என உருக்கமாகக் கூறியுள்ளார்.

செல்ஃபியால் பலர் உயிர்களை இழந்துள்ள நிலையில், ஒருவர் செல்ஃபியால் தன் வாழ்க்கையை மீட்டெடுத்துள்ள இந்தச் செய்தி இணையதளத்தில் வைரலாகிவருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க