7 பேரில் ஒருவர் மில்லியனர்... நியூயார்க்கை ஹாங்காங் முந்தியது எப்படி?! | How Hong Kong become the world's richest city

வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (21/11/2018)

கடைசி தொடர்பு:09:12 (22/11/2018)

7 பேரில் ஒருவர் மில்லியனர்... நியூயார்க்கை ஹாங்காங் முந்தியது எப்படி?!

தற்போதையை நிலைப்படி உலகின் பணக்கார நகரம் ஹாங்காங்.

7 பேரில் ஒருவர் மில்லியனர்... நியூயார்க்கை ஹாங்காங் முந்தியது எப்படி?!

சில நகரங்களில் வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நகரங்களில் ஹாங்காங் நகரமும் ஒன்று. வானுயர்ந்த கட்டடங்களும் ஆயிரக்கணக்கில் இங்கே உள்ளன. இரவில் மிளிரும் ஹாங்காங் நகரைக் காண கோடி கண்கள் வேண்டும்.  மண்ணையும் பொன்னாக்கிக் காசாக்கி விடும் கடும் உழைப்பாளிகள் நிறைந்த நகரம். தீப்பட்டி போன்ற சிறிய வீடுகளில் வசிப்பார்கள். ஆனால், அவர்களின் மாத வருமானம் இந்திய மதிப்பில் 5 லட்சம் ரூபாய் இருக்கும். உழைப்பாளிகளுக்கு ஹாங்காங் சொர்க்க பூமி.

இந்தியாவுக்கு `கேட்வே' மும்பை என்றால் சீனாவுக்கு `கேட்வே' இந்த ஹாங்காங்தான். மும்பை போலவே சீனாவின் பணக்கார நகராகத் திகழ்ந்த ஹாங்காங், தற்போது உலகப் பணக்கார நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இந்தப் பட்டியலில் நியூயார்க் நகரம்தான் முதலிடத்தில் இருந்து வந்தது. நியூயார்க் நகரத்தில் 9 ஆயிரம் மில்லியனர்கள் வாழ்ந்தார்கள் என்றால் ஹாங்காங்கில் 10,000 மில்லியனர்கள் வாழ்கிறார்கள்.  ஹாங்காங்

1997-ம் ஆண்டு வரை ஹாங்காங் பிரிட்டன் வசம் இருந்தது. அதனால், சீனாவின் மற்ற நகரங்களிலிருந்து ஹாங்காங் சற்று வேறுபடும். சீன நகரங்களின் சாயல் இருக்காது. மாறாக மேற்கத்தியக் கலாசாரம் மேலோங்கிக் காணப்படும். தற்போது சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டாலும் தனி அந்தஸ்துடன்தான் ஹாங்காங் நகரம் உள்ளது. அவ்வப்போது தனி நாடு கோஷம் எழும். எனினும், பெரும் பிரச்னை ஏற்பட்டதில்லை. இந்த நகரத்தில் பொருளாதார தாராளமயமாக்கம் கடந்த 20 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பிற நாடுகளில் தொழில் தொடங்க அந்த நாட்டுக் குடிமகன் நம்முடன் பங்குதாரராக இருக்க வேண்டும். 

அதாவது, வளைகுடா நாடுகளில் அந்நாட்டு குடிமகனுடன் சேர்ந்துதான் நாம் தொழில் தொடங்க முடியும். ஆனால், ஹாங்காங் நகரில் யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். 100 சதவிகிதம் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதனால், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஹாங்காங்கில் முதலீடு செய்ய அக்கறை காட்டுகின்றன. இங்கே லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குறைவு. சட்டத்தின்படியே அனைத்தும் செயல்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலமாகக் கருதப்படும் ஹாங்காங்கில், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் அத்தனை பொருள்களும் அடுத்த நிமிடம் விற்பனைக்கு வந்து விடுவதும் பெரும் பலம்.  

ஹாங்காங்

ஆசியாவின் 50 பில்லியனர்களில் 9 பேர் இந்த நகரத்தில் வசிக்கின்றனர். ஹாங்காங்கைச் சேர்ந்த  50 பில்லியனர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 235 பில்லியன் பவுண்டுகள். 2017- ம் ஆண்டை விட இந்த ஆண்டு 13 சதவிகிதம் மில்லியனர்கள் இந்த நகரத்தில் அதிகரித்துள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரத்தின் மந்த நிலை காரணமாக நியூயார்க் நகருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

உலகின் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் நகரங்கள் பட்டியலில் டோக்கியோவுக்கு 3-வது இடம். லாஸ் ஏஞ்சலீஸ், பாரீஸ், லண்டன், சிகாகோ, சான் ஃபிரான்ஸிஸ்கோ, வாஷிங்டன், ஒசாகா நகரங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெறுகின்றன. நாடுகள் என்று எடுத்துக் கொண்டால் அமெரிக்காவில் 80,000 பெரும் பணக்காரர்கள் வசிக்கின்றனர். சீனாவில் 17,000 பெரும் பணக்காரர்கள் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close