புறப்பட்ட போயிங் ரக விமானம்... ரன்வேயில் பலியான இளைஞர்... ரஷ்யாவில் சோகம் | Young man died after hit by flight while take off

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (22/11/2018)

கடைசி தொடர்பு:08:30 (22/11/2018)

புறப்பட்ட போயிங் ரக விமானம்... ரன்வேயில் பலியான இளைஞர்... ரஷ்யாவில் சோகம்

ரஷ்யாவில்,  விமான ஓடுதளத்தில், பயணி ஒருவர்  போயிங் ரக விமானம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விமானம்

File Photo

ரஷ்யாவின் பரபரப்பான விமான நிலயங்களில் மாஸ்கோவில் இருக்கும் ஷெர்மெட்யெவோ விமான நிலையமும் ஒன்று. தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 25 வயது இளைஞர் ஒருவர் ஓடும் விமானம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆல்பர்ட் என்னும் அந்த இளைஞர், அர்மேனியா நாட்டுக்குச் செல்ல ஸ்பெயின் நாட்டிலிருந்து கிளம்பியுள்ளார். நேரடி விமானம் இல்லாததால் ரஷ்யா வந்து, அங்கிருந்து இணைப்பு விமானம்மூலம் செல்ல வேண்டும். ரஷ்யா விமான நிலையம் வந்த அவரும் மற்ற பயணிகளும், காத்திருக்கும் அறைக்குச் செல்லும் பேருந்துக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர். அப்போது, அந்த இளைஞர் மட்டும் மீண்டும் விமான ஓடுதளத்துக்குத் திரும்பியுள்ளார். 

அப்போது, மாஸ்கோவில் இருந்து ஏதன்ஸ் நகருக்குச் செல்லும் போயிங் 737 விமானம், ஓடுதளத்திலிருந்து கிளம்பியுள்ளது. விமானம் கிளப்பும்போது அதிகப்படியான சக்தியை வெளிப்படுத்தும். இதில்தான் ஆல்பர்ட் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, விமானத்திலிருந்து விமான நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த தகவலில், ஓடுதளத்தில் குறுக்கிட்ட விலங்கு ஒன்றில் மோதியதாகத் தெரிகிறது. ஆனால் தெளிவாகத் தெரியவில்லை என்றே சொல்லப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டபோது, காலணிகள் மற்றும் கோட்  சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னரே, அவரது உடல் மீட்கப்பட்டு விசாரணை தொடங்கியது. போயிங் 737 விமானம் பத்திரமாக ஏதன்ஸ் நகரில் தரையிறங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் யார் மீதும் வழக்குப் பதியவில்லை. இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.