அமெரிக்கர் கொலை; வெளியுலகத்தை வெறுக்கும் அந்தமான் `சென்டினல்' பழங்குடிகள் யார்? | American allegedly killed by isolated tribe in Andaman

வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (22/11/2018)

கடைசி தொடர்பு:14:37 (22/11/2018)

அமெரிக்கர் கொலை; வெளியுலகத்தை வெறுக்கும் அந்தமான் `சென்டினல்' பழங்குடிகள் யார்?

ந்தமானில் சென்டினல் தீவில் சென்டினல் இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவதில்லை. அந்தமானில் வசிக்கும் மற்ற பழங்குடியினரிடத்திலும் இவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. வனவிலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்பவர்கள். இவர்கள் பேசும் மொழியும் பிற இன மக்களுக்குப் புரியாது. இந்தப் பழங்குடியின மக்களைச் சந்திக்க விரும்பிய அமெரிக்கர் ஒருவர் இவர்கள் கையில் சிக்கி உயிரிழந்தார். 

 சென்டினல் பழங்குடிகளால் கொல்லப்பட்ட ஆலன்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜான் ஆலென் காவ் (வயது 27). சென்டினல் பழங்குடியின மக்களைச் சந்திக்க ஆர்வம் கொண்டு தொடர்ந்து 5 முறை அந்தமான் சென்றிருக்கிறார். ஆனால், அவரின் ஆசை நிறைவேறவில்லை. இந்நிலையில் 6வது முறையாக மீண்டும் சென்டினல் தீவுக்குச் சென்றார். நவம்பர் 16-ம் தேதி அந்தமானைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் அவரைப் படகில் வடக்கு சென்டினல் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தீவுக்குள் தனியாக தான் செல்லப் போவதாக மீனவர்களிடத்தில் அவர் கூறியிருக்கிறார். 

தீவில் இறக்கிவிடப்பட்ட ஆலன் உள்ளே நடந்து சென்றுள்ளார். அப்போது ஆலனை நோக்கி அம்புகள் பாய்ந்து வந்துள்ளன. அம்புகளைச் சட்டை செய்யாமல் தொடர்ந்து தீவுக்குள் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வந்த பழங்குடிகள் ஆலனின் கழுத்தைக் கயிற்றால் இறுக்கி உள்ளே இழுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  

அந்தமானைச் சேர்ந்த மத போதகரும் ஜான் ஆலனின் நண்பருமான அலெக்ஸ் என்பவரிடம் நடந்த சம்பவத்தை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அமெரிக்காவில் உள்ள ஜான் ஆலன் குடும்பத்தை தொடர்பு கொண்டு அவர் விஷயத்தைக் கூறினார். டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தொடர்புக் கொண்டு ஆலனின் உறவினர்கள் உதவி கோரினர். ஹெலிகாப்டரில் சென்று ஆலனைத் தேட முடிவு செய்தாலும் சென்டினல் தீவில் இறங்கித் தேடுவதும் ஆபத்தானது. எனினும் ஆலனின் சடலத்தை மீட்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜான் ஆலனை சென்டினல் தீவுக்கு அழைத்துச் சென்ற 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க தூதரகம் ஜான் ஆலன் காணாமல் போனதாக அறிவித்துள்ளது. 

சென்டினல் பழங்குடிகள்

சென்டினல் தீவு உள்ளிட்ட 28 தீவுகள் வெளிநாட்டவர் நுழைய தடை விதிக்கப்பட்ட பகுதி ஆகும். ஜான் ஆலன் சென்டினல் மக்களை மத மாற்றும் நோக்கத்துடன் சந்திக்க விரும்பியதாக போர்ட்பிளேர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2011 சர்வேப்படி அங்கு 15 சென்டினல்களே இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் முழுமையான எண்ணிக்கை அல்ல. அங்கு இருக்கும் மக்களை நேரடியாக சந்திக்க பயந்து, தொலைவில் இருந்து கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறார்கள். 2001 சர்வேப்படி அங்கு மக்கள் தொகை 39 . தீவுக்கு வெளியே இருந்து புகைப்படங்கள் எடுத்தே இவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்தப் பழங்குடி மக்களை ஆலன் சந்திக்க பல ஆண்டுகளாக முயன்று வந்துள்ளார். ஆலன் கொல்லப்படுவதற்கு இரு நாள்களுக்கு முன்னதாக நவம்பர் 14-ம் தேதி சென்டினல் தீவுக்குள் செல்ல முயன்றார். கையில் பைபிள், மீன்கள், கால்பந்து ஆகியவற்றை பழங்குடியின மக்களுக்குப் பரிசாகக் கொண்டு சென்றுள்ளார். 20 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு மீனவர்கள் அவரை தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆலனை கண்டு ஆத்திரமடைந்த மக்கள் அம்புகளை ஏவியுள்ளனர். உடனடியாக கடலுக்குள் குதித்த ஆலன் நீந்திச் சென்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த படகில் ஏறி உயிர் தப்பினார். போர்ட் பிளேர் திரும்பிய அவர் உறவினர்களுக்கு `தான் கொல்லப்பட்டால் வருத்தமும் கோபமும் அடைய வேண்டாம்' என்று இ-மெயில் அனுப்பியுள்ளார். மெயில் அனுப்பிய அடுத்த நாளே ஜான் ஆலன் நினைத்தது மாதிரியே நடந்து விட்டதுதான் துயரம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close