வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:14:00 (22/11/2018)

`ஏமாற்றியதைத் தாங்க முடியல!' - காதலனைக் கொன்று பிரியாணி சமைத்துப் பரிமாறிய காதலி

தன்னைக் காதலன் ஏமாற்றியதால், அவரைக் கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி, பிரியாணி சமைத்துள்ளார் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர்.

கொலை

இதுகுறித்து 'தி நேஷனல்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ``மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவரும் ஏழு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அபுதாபியில் தங்கிப் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால் ,காதலன் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து மொராக்கோ நாட்டிலேயே செட்டில் ஆக முடிவெடுத்துள்ளார். இதைக் காதலியிடம் தெரிவித்ததுடன், திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலி, காதலனைக் கொலைசெய்து, அவரது உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி, அதைக் கொண்டு `மச்பூஸ்' என்னும் பிரியாணி சமைத்துள்ளார். அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த பாகிஸ்தான் நாட்டு கட்டுமானத் தொழிலாளர்களுக்குப்  பரிமாறியுள்ளார்." இந்தச் சம்பவங்கள் நடந்து முடிந்து 6 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்நிலையில்தான் கொல்லப்பட்ட நபரின் சகோதரர், `` ''என் சகோதரரைக் காணவில்லை" என போலீஸில் புகார் அளித்துள்ளார். 

அவரின் புகாரின் பேரில் வழக்கை விசாரித்துவந்த போலீஸார், அந்தப் பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அதில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மனிதப் பற்கள் கிடைத்துள்ளன. அந்தப் பற்களைக்கொண்டு டிஎன்ஏ சோதனை நடத்தியதில், அது கொல்லப்பட்ட நபரின் பற்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னர், அந்தப் பெண்ணைக் கைதுசெய்துள்ளனர். அப்போதுதான் இந்த உண்மையைக் கூறி போலீஸாரை அதிரவைத்துள்ளார். `தன்னால் காதலன் ஏமாற்றியதைத் தாங்க முடியவில்லை. அதனாலேயே  அவனைப் பழிவாங்க வேண்டும் என நினைத்து அவனைக் கொலைசெய்தேன்" எனக் கூறும் அவர், பிரியாணி சமைத்தது போக மீதமுள்ள உடல் பாகங்களை நாய்க்கு உணவாக அளித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதற்கிடையே, கொலைச் சம்பவத்துக்காக அப்பெண்ணுக்கு உடந்தையாக இருந்த ஒருவரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அந்தப் பெண்குறித்த விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. 30 வயதாகும் அந்தப் பெண்ணுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறி போலீஸார் சிகிச்சைக்கு ஏற்பாடுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம், அபுதாபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க