`கருத்தரிக்கும் முன் பாஸிடம் அனுமதி வாங்கணும்!' - பெண் ஊழியர்களைக் கலங்கடித்த நிறுவனம் | The china firm ask there women employee to pay penalty

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (23/11/2018)

கடைசி தொடர்பு:13:02 (23/11/2018)

`கருத்தரிக்கும் முன் பாஸிடம் அனுமதி வாங்கணும்!' - பெண் ஊழியர்களைக் கலங்கடித்த நிறுவனம்

சீனாவில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, அந்த நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

பிரசவம்

File Photo

சீனா, உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் நாடு. அங்கு இருக்கும் வங்கி நிர்வாகம் ஒன்று, தங்களது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பெண் ஒருவர் அந்த ஆண்டில் கருத்தரிக்க விரும்பினால், ஜனவரி மாதம் அது தொடர்பாக அவர்களின் பாஸுக்கு தெரிவிக்க வேண்டுமாம். அதற்குத் தனியாக அப்ளிகேஷன் நிரப்பி, அனுமதி பெற வேண்டுமாம். 

அப்படி அனுமதி பெறாமல் கருவுற்ற சில பெண்களுக்கு, அந்த நிறுவனம் இரண்டு வழிகளைக் கூறியுள்ளது. அதாவது, பெனால்டியாக பணம் கட்ட வேண்டும் அல்லது கருவைக் கலைக்க வேண்டும் என்று நிர்வாகம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துள்ளனர்  பெண் ஊழியர்கள். இது தொடர்பாகக் கடந்த சில நாள்களுக்கு முன்னர், பணியாளர்கள் சேவை மையத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவிக்க, இந்தத் தகவல் வெளி உலகத்துக்குத் தெரியவந்துள்ளது. எனினும், புகார் அளித்த பெண்குறித்தோ அல்லது அந்த நிறுவனம்குறித்தோ எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், அது ஒரு வங்கி நிறுவனம் என உள்ளூர் செய்தி ஊடகம் கூறியுள்ளது. 

சீனாவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரு தம்பதியினர் இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள சட்டம் உள்ளது. எனினும், பிரசவ காலத்தில் பெண்களின் ஊதியத்தைக் குறைப்பது தொடர்பாக எந்தச் சட்டமும் இல்லை. இது தொடர்பாகப் புகார் வந்ததும், பணியாளர் சேவை மையம், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி, உடனடியாக அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளது. பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில், இதுபோன்ற சட்டங்கள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.