``உங்க காரை இடிச்சது எங்க ஸ்கூல் பஸ்தான்” - உரிமையாளருக்குக் கடிதம் எழுதிய குழந்தை | The car was damaged by my school bus, letter written by school kid

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (24/11/2018)

கடைசி தொடர்பு:12:03 (24/11/2018)

``உங்க காரை இடிச்சது எங்க ஸ்கூல் பஸ்தான்” - உரிமையாளருக்குக் கடிதம் எழுதிய குழந்தை

குழந்தைகள், பல நேரங்களில் பெரியவர்களைவிட சிறப்பாக சிந்திப்பார்கள். கண் முன்னே நடக்கும் பல குற்றங்களைக் கண்டும் காணாமல் செல்லும் மன நிலையில்தான் பலரும் இருக்கின்றோம். ஆனால், யாரென்றே தெரியாத 6 - ம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையின் செயல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளது. 

குழந்தையின் கடிதம்

நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ. பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது காஸ்ட்லி மஸ்டாங் கார் சேதப்படுத்தப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அது, அவரது ட்ரீம் கார்.  இதைச் செய்தவர்கள் யார் என்பது தொடர்பாக கோபத்துடன் இருந்தவரை, ரிலாக்ஸ் செய்திருக்கிறது, அந்த காரின் மேல் இருந்த ஒரு கடிதம். அது ஒரு சுட்டிக் குழந்தையின் கையழுத்தில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யத்துடன் படித்து, அதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

அந்தக் கடிதத்தை எழுதியது,  6 -ம் வகுப்பு படிக்கும் சுட்டிக் குழந்தை. அந்தக் குழந்தைதான் கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதில்,  ``உங்கள் காருக்கு என்ன ஆகியது என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் காரை இடித்தது எங்கள் பள்ளி வாகனம்தான். பேருந்து எண்: 449. அந்தப் பேருந்து, தினமும் என்னை அழைத்துச்சென்று, பின் இங்கே இறக்கிவிடும். இந்தச் சம்பவம் மாலை 5 மணிக்கு நடந்தது. ஓட்டுநர் காரை எடுக்கும்போது மோதிவிட்டார். அதன்பின் நிறுத்தாமல் சென்றுவிட்டார். அவர் மோதியதில் உங்கள் வாகனம் சேதமடைந்தது. இதனை நான் நேரடியாகப் பார்த்தேன். ஸாரி! பேருந்தை இயக்கியவர் ஒரு பெண் ஓட்டுநர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதன் பின்னர், அந்தப் பேருந்து எப்படி இருக்கும் என்பதையும் தனது கையால் வரைந்துள்ளார் அந்தச் சுட்டி. அதற்கும் கீழே, ஹௌடன் அகாடமியின்  6 -ம் வகுப்பு ஸ்டூடென்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடிதம்

இந்தத் தகவலை ஆண்ட்ரூ ட்வீட்டாகப் போட்டதும் செம வைரலாகியுள்ளது. ``இது தொடர்பாக குறிப்பிட்ட பேருந்து நிறுவனத்திடம் பேசிவிட்டேன். காரை சரி செய்வதற்கு உதவுகிறோம் என அவர்கள் உறுதி அளித்தனர். மேலும் குறிப்பிட்ட அந்த ஓட்டுநரும் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவித்தனர். குறிப்பிட்ட அந்தக் பள்ளியின்  ஆசிரியர் ஒருவர், கையழுத்தை வைத்து அந்தக் குழந்தை யார் என்பதைச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார். ஒரு 6 -ம் வகுப்பு குழந்தை எனது செலவையும், கோபத்தையும் குறைத்துவிட்டது. அதுவும் அவர் வரைந்துள்ள பேருந்து, ஓவியத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளைப் பார்த்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது” என்றார் 

மேலும், அந்தப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் சி.என்.என்,  ``அந்தக் குழந்தை யார் என்று கண்டுபிடித்து விட்டோம். அவரது உதவும் எண்ணத்தைக் கொண்டாட உள்ளோம்.  அவருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளோம்” என்றார். ஒரு 6 -ம் வகுப்பு படிக்கும் குழந்தையின் உதவும் எண்ணத்தை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.