லயன் ஏர் விமான விபத்து! - 27 நாள்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விமானி | Indonesian authorities have identified the body of Indian pilot Bhavye Suneja

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (25/11/2018)

கடைசி தொடர்பு:15:11 (25/11/2018)

லயன் ஏர் விமான விபத்து! - 27 நாள்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விமானி

அக்டோபர் 29-ம் தேதி காலை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவு நோக்கிக் கிளம்பிய லயன் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் மாயமானது. ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர். ஜகார்த்தாவிலிருந்து 6:20 மணிக்கு லயன் ஏர் விமானம் புறப்பட்டது. கிளம்பிய 13 நிமிடங்களில் அதாவது சரியாக 6:33 மணிக்கு விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 7:20 மணிக்கு பங்கல் பினாங் தீவு சென்றிருக்கவேண்டிய விமானம் நடு வழியில் காணாமல் போனது. இதைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விமானம் வடகிழக்கு ஜாவா கடல் பகுதியில் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் கடலில் விழுந்ததால் அதில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர். 

லைன் ஏர் விமானம்

இதையடுத்து உயிரிழந்தார்களின் உடல்களை மீட்கும் பணிகளும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன.  விமானம் விபத்துக்குள்ளானதுக்கு முந்தைய நாள் அதில் பழுது இருந்ததாகவும் அதைச் சரிசெய்த பின்னரே விமானம் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு இயந்திரக் கோளாறு காரணமாகவே விபத்துக்குள்ளானது எனக் கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைக் கண்டுபிடிக்கமுடிவில்லை இதனால் அவர்களைத் தேடும் பணிகளை நிறுத்திக்கொள்வதாக இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை குழு அறிவித்தது. இந்நிலையில் தற்போது லயன் ஏர் விமானத்தை இயக்கிய இந்தியாவைச் சேர்ந்த விமானி பவ்ய சுனேஜாவின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “லயன் ஏர் விமானத்தை இயக்கிய கேப்டன். பவ்ய சுனேஜாவின் உடல் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இன்று அவரின் உடல் இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது. அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளாகிச் சரியாக 27 நாள்களுக்குப் பிறகு விமானியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக தீபாவளி விடுமுறைக்காக விமானி இந்தியா வரவிருந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.