`வெளிநாடுகளில் இருந்து குவியும் வெடி பொருள்கள்?’ - சிரியாவில் மீண்டும் விஷ வாயு தாக்குதல் | 107 people hospitalised after suspected gas attack in syria

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (26/11/2018)

கடைசி தொடர்பு:09:00 (26/11/2018)

`வெளிநாடுகளில் இருந்து குவியும் வெடி பொருள்கள்?’ - சிரியாவில் மீண்டும் விஷ வாயு தாக்குதல்

சிரியாவில் பொதுமக்கள் மீது நடந்த விஷ வாயு தாக்குதலில் சுமார் 100-க்கும் அதிகமானவர்கள் சுவாசக் கோளாறினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சிரியா தாக்குதல்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆதரவுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2011–ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அது இன்னும் நீடித்து வருகிறது. அங்கு அரசுப்படைகளும் கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தும் ரஷ்யாவின் உதவியுடன் சிரியா அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

சமீபத்தில்  கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின்போது அப்பாவி பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலக மக்களின் இதயத்தைக் கனக்க செய்தது. பிறகு சிரியா போர் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க சிரியா அரசுக்கு ஐநா சபை மற்றும் அதிபர் ட்ரம்ப் உட்பட பல நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்தன. ஆனால், தாங்கள் ரசாயன தாக்குதல் நடத்தவில்லை என சிரியாவும் ரஷ்யாவும் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு பொதுமக்கள் மீது விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் அலெப்போ பகுதியில் அரசுப் படைகள் நடத்திய விஷ வாயு தாக்குதலினால் குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 107 பேர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அங்கு விஷ வாயு (குளோரின்) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை வெளிநாடுகளிலிருந்து சிரியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சிரியாவுக்கு ஆயுதங்கள் போன்ற பொருள்கள் வழங்கிய ரஷ்யா மற்றும் துருக்கிதான் தற்போதும் ரசாயன வெடிபொருள்களை இறக்குமதி செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.