வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (26/11/2018)

கடைசி தொடர்பு:14:00 (26/11/2018)

கண்ணீர் புகைக் குண்டு; துப்பாக்கிச் சூடு! - அகதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் நுழைய முயன்ற அகதிகள் மீது மெக்ஸிகன் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

குடியேறிகள்

PhotoCredits : Twitter/@aflores

அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றத்தில் இருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இராக், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளின் பயணிகள் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு அதிபர் ட்ரம்ப் தடை விதித்தது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு பலத்த கட்டுப்பாடுகள் விதித்ததோடு அவர்களின் குழந்தைகளைப் பெற்றோர்களிடம் இருந்து தனியாகப் பிரித்தும் வைத்தார். இவரின் சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு அமெரிக்காவுக்குள்ளும், உலகம் முழுவதிலிருந்தும் பல கண்டனங்கள் குவிந்தாலும் ட்ரம்ப் அசரவில்லை. 

மற்ற நாட்டைச் சேர்ந்த அகதிகள் மெக்ஸிகோ நகரில் உள்ள சான் சிட்ரோ கேட் வழியாகத்தான் அமெரிக்காவுக்குள் நுழையமுடியும். நேற்று 3,000 பேர் மெக்ஸிகோ நகரின் எல்லைப் பகுதியில் உள்ள சிறு ஆற்றைக் கடந்து சான் சிட்ரோ கேட் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். இதை அறிந்த மெக்ஸிகோ காவல்துறையினர் சான் சிட்ரோ கேட்டை தற்காலிகமாக மூடினர். உலகிலேயே அதிகம் பிஸியாக உள்ள  ஓர் எல்லைப் பகுதி இதுவாகும். நேற்று இது தற்காலிகமாக மூடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மேலும், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 

இதற்கிடையே அந்த வழியாக முன்னேறி வந்த அகதிகள் மீது மெக்ஸிகன் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசித் தடுத்தனர். தொடர்ந்து ரப்பர் குண்டு பொருந்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது. இவை அனைத்தையும் மீறி போலீஸார் வைத்திருந்த பேரிகாடுகளைத் தாண்டி உள்ளே நுழைய முயன்ற அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடைகளைத் தாண்டி அத்துமீறி உள்ளே நுழைந்ததாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெக்ஸிகன் அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரம் வரை கண்ணீர் புகைக் குண்டுகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிறகு அந்தப் பகுதியில் எந்த அகதிகளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே காவல்துறையினர் எல்லைப் பகுதியைவிட்டு விலகிச் சென்றுள்ளனர்.