வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (26/11/2018)

கடைசி தொடர்பு:16:53 (26/11/2018)

தாய்லாந்து தீவில் சுற்றுலாப் பயணிகளை அதிரவைத்த காட்சி! - வைரலான வீடியோ

அந்தமான் கடலில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை ஆச்சர்யத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. 

நீர் சுழற்சி

தாய்லாந்தில் உள்ள கோ லிப் (Ko Lipe) என்ற தீவு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துபோகும் இடம். விடுமுறை நாள்களில் இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். நேற்று இந்தத் தீவுக்கு வந்தவர்களுக்கு அந்தமான் கடலில் நடந்த ஒரு நிகழ்வு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென கோ லிப் தீவில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கடலில் இருந்து 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை நீர் சுழற்சிகள் எழும்பின. பொதுவாக அலை ஏற்பட்டாலே அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் தொற்றிக்கொள்ளும். ஆனால், நேற்று அந்தமான் கடலில் ஒரே இடத்தில் நான்கு நீர் சுழற்சிகள் உருவாகி அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை ஆச்சர்யத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவை சமூகவலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

மேகங்களில் இருந்து உருவாகும் சுழற்சி தண்ணீருடன் கலக்கும்போது நீர் சுழற்சியாக மாறுகிறது. இதில் ஃபேர் வெதர் மற்றும் டோர்னடிக் என இரண்டு வகை உள்ளது. ஃபேர் வெதர் மிகவும் பொதுவானது அவ்வப்போது ஆபத்தானது. பல இடங்களில் அடிக்கடி தோன்றி மறையும். ஆனால், டோர்னடிக் என்ற நீர் சுழற்சி மிகவும் ஆபத்தானது. அதுபோன்ற நீர் சுழற்சி ஏற்பட்டால் அழிவு நிச்சயம். 

நேற்று கோ லிப் தீவில் ஏற்பட்ட நீர் சுழற்சி ஃபேர் வெதர் வகை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் திடீரென ஒரே இடத்தில் இத்தனை நீர் சுழற்சிகளைக் கண்டதும் அதிகாரிகளும் சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்துவிட்டனர். இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.