வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (26/11/2018)

கடைசி தொடர்பு:05:58 (28/11/2018)

`விலங்குகளுக்குப் பதில் மனிதர்கள்தான் காட்சிப்பொருளா?’ - அந்தமான் பழங்குடிகளின் அழிவுக்கு வித்திட்ட துரோகப் பின்னணி

அந்தமானின் சென்டினல் பழங்குடி மக்களால் அமெரிக்க மதபோதகர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்டினல் மக்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இணையத்தை அலசியதில் அந்தமான் பழங்குடிகளுக்கு நாம் இழைத்த துரோகங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. இந்திய அரசும் அதன் பிரஜைகளும், வெளிநாட்டவர்களும்  ஜாரவா என்னும் பழங்குடியின மக்களுக்கு இழைத்துக்கொண்டிருக்கும் துரோகம் இன்றளவும் நீடிக்கிறது. பழங்குடிகளின் அழகான வாழ்வியல், நவநாகரீக மனிதர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. 

அந்தமான்
 

`ஜாரவா பழங்குடி’... என்று கூகுளில் டைப் செய்தால் சுற்றுலாப் பயணிகள் சிலர் பகிர்ந்த வீடியோக்கள்தான் முதலில் வருகின்றன. அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் நவநாகரிக மனிதர்கள், உலகின் மூத்த தொல்குடியினத்தை எப்படியெல்லாம் நடத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது அந்த வீடியோக்கள். வனவிலங்கு காப்பகத்தில் விலங்களுக்கு உணவுப் பொருள்களைத் தூக்கி வீசுவார்கள் அல்லவா? அதுபோன்று சுற்றுலாப் பேருந்தில் செல்லும் சிலர், நம் பொக்கிஷங்களாகக் கருத வேண்டிய பழங்குடியின மக்களுக்கு வாழைப் பழங்களையும் ப்ரட்டு துண்டுகளையும் வீசுகின்றனர். இன்னும் சிலர் அவர்களை நடனம் ஆட வைத்துள்ளனர். அந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்து எதையோ சாதித்தது போன்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து புலகாங்கிதம் அடைந்துள்ளனர் அந்த நவநாகரிக மனிதர்கள்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஜாரவா, கிரேட் அந்தமானீஸ், ஒன்கே, சென்டினல் ஆகிய நான்கு இனக்குழுக்கள் வசித்து வருகின்றன. பழங்குடியின மக்களான இவர்கள், இந்தப் பிரபஞ்சத்தின் மூத்த குடியினமாகக் கருதப்படுகிறார்கள். சுமார் 55,000 ஆண்டுகளாக இந்திய பெருங்கடல் இவர்களை அரணாகப் பாதுகாத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். அந்தமான் பழங்குடிகளின் வாழ்வியல் அழகானது. இவர்கள் பன்றிகளை வேட்டையாடி உணவாக உட்கொள்வார்கள். மீன்களும் இவர்களுக்குப் பிடித்த உணவு. பழங்கள், வேர்கள், தேன் உள்ளிட்டவற்றையும் சேகரித்து உட்கொள்வார்கள்.   வெளி உலகத்துடன் தொடர்பற்ற இவர்களைப் `பாதுகாக்க வேண்டிய’ மக்களாக இந்திய அரசு அறிவித்தது. அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. 1956-ம் ஆண்டு தொல் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம் ( Protection of aboriginal tribes regulation) இயற்றப்பட்டது.  அதன்படி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வெளியுலக மனிதர்கள் செல்லக் கூடாது. இந்திய அரசு கொடுத்த பாதுகாப்பு உண்மையில் அவர்களைப் பாதுகாக்கவில்லை. ஆம், அந்தமான் பழங்குடி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. முக்கியமாக ஜாரவா பழங்குடியின மக்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். 

1970-ம் ஆண்டு திறக்கப்பட்ட அந்தமான் நெடுஞ்சாலையே இந்த அழிவுக்குக் காரணம். வடக்கு மற்றும் மத்திய அந்தமான் பகுதிகளை இணைப்பதற்காகக் காட்டு பகுதிகளின் ஊடே இந்த அந்தமான் ட்ரன்க் சாலை அமைக்கப்பட்டது. ஜாரவா மக்களின் வசிப்பிடத்துக்கு மிக அருகே சாலை சென்றது. பொதுவாகப் பழங்குடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகத்தான் இருக்கும். எனவே, சாலை கட்டமைப்புப் பணிகளின்போது பணியாளர்களிடமிருந்து ஜாரவா மக்களுக்கு நோய்த்தொற்று பரவியது. சாலை போடும்போதே ஜாரவா மக்கள் பலர் நோய்த்தொற்றால் பலியானார்கள்.

சாலை செயல்பாட்டுக்கு வந்த பின்பு வேறு சில பிரச்னைகளும் ஜாரவா மக்களின் உயிருக்கு உலை வைத்தன. வேட்டைக்காரர்கள், கடத்தல்காரர்கள் ஜாரவா மக்களைத் தொந்தரவு செய்யத் தொடங்கினர். ஜாரவா இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் போதைப் பொருள்களைக் கொடுத்து சுவைக்க வைத்தனர். ஜாரவா பெண்கள் சுற்றுலாப் பயணிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நடந்தன. அதன் பிறகு சர்வைவல் என்னும் சர்வதேச பழங்குடியின பாதுகாப்பு அமைப்பும் இந்திய அமைப்புகளும் இணைந்து ஜாரவா மக்கள் பாதுகாப்புக்காகப் போராடின. அதன் பின் இந்திய அரசு விதிகளைக் கடுமையாக்கியது. 2002-ம் ஆண்டு அந்தமான் டிரன்க் சாலையை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. (ஆனால், இன்றளவும் அந்தச் சாலை பயன்பாட்டில் இருக்கிறது). 

ஜாரவா

Image credits : Twitter / Gethin Chamberlain

`ஜாரவா மக்கள் வசிப்பிடங்களுக்கு யாரும் செல்லக் கூடாது’ என்னும் தடையை சுற்றுலாப் பயணிகள் சிலர் பொருட்டாகவே மதிக்கவில்லை. அப்பகுதிகளில் செக் போஸ்டுகள் நிறுவப்பட்டும் பலனில்லை. சிலர் காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்கின்றனர். இப்படிதான்  2014-ம் ஆண்டு பிரான்ஸ் திரைப்பட இயக்குநர் அலெக்ஸாண்டர் டெரிம்ஸ் மற்றும் தயாரிப்பாளர் கிளாரி பெலிவர்ட், ஜாரவா பழங்குடியினர் பகுதிக்குச் சென்று அவர்களை வீடியோ எடுத்து குறும்படமாக வெளியிட்டனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 

இதனிடையே 2004-ல் சுனாமியில் அந்தமான் தீவு உருக்குலைந்தது. பெரும் சேதத்தை சரிக்கட்ட அந்தமான் சுற்றுலாவை விரிவுபடுத்த இந்திய அரசு முடிவு செய்தது. அந்தமான் டிரன்க் சாலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ரிசார்ட்டுகள் முளைத்தன. `ஜாரவா மக்களைக் காண்பிக்கிறோம்’ என்று வெளிப்படியாகவே சில சுற்றுலா நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றனர். வளர்ச்சி என்னும் பெயரில் அரசு செய்த ஒவ்வொரு விஷயமும் ஜாரவா மக்களின் எண்ணிக்கை குறைய காரணமாக மாறியது. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஜாரவா மக்கள் 380 பேர் வரை இருக்கலாம் எனக் கூறப்பட்டது. 

ஜாரவா
Image credits : Twitter / Gethin Chamberlain

உலகின் தொல்குடியினத்தை இதற்கு மேல் அவமானப்படுத்திவிட முடியாது என்னும் அளவுக்கு ஒரு கொடிய செயல் சுற்றுலா என்னும் பெயரில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மிருக காட்சியகத்தில் விலங்குகளை காட்சிப்படுத்துவார்கள் அல்லவா? அதுபோன்று மனிதக் காட்சி (Human Safari) என்னும் பெயரில் சுற்றுலாவாசிகளுக்கு உள்ளூர் டூரிஸ்ட் கைடுகள் ஜாரவா மக்களைக் காட்டுகின்றனர்.


வெளியுலக மனிதர்கள் கொடுக்கும் தின்பண்டங்களின் சுவைக்கு அடிமையான சில ஜாரவா குழந்தைகளும் பெண்களும் நெடுஞ்சாலையில் வந்து நிற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தின்பண்டங்களின் சுவைக்கு அவர்கள் அடிமையானதால், சாலைக்கு வந்து சுற்றுலாப் பயணிகளிடம் கையேந்தி நிற்கின்றனர். அப்படி வந்து நிற்கும் ஜாரவாக்களைக் காண சுற்றுலா வாகனகள் வரிசைகட்டி நிற்கின்றன. இது அவர்களுக்கு இழைக்கும் துரோகம் என்பதை நவநாகரிக மனிதர்கள் உணரும் முன் ஜாரவா பழங்குடி காணாமல் போயிருக்கும். இதைத் தடுத்து நிறுத்த பழங்குடியின மக்கள் நலனுக்காக இயங்கி வரும் சர்வைவல் இன்டர்நேஷனல் தொண்டு அமைப்பு பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியின் பலனாக 2017-ம் ஆண்டு அந்தமான் டிரன்க் சாலைக்கு மாற்றாகக் கடல்வழி பாதையைத் திறந்தனர். மனிதக் காட்சி சுற்றுலாவை இந்தக் கடல்வழிப்பாதை நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெகு சிலரைத் தவிர யாருமே கடல்வழி பாதையைப் பயன்படுத்தவில்லை. காரணம் காட்டு வழியாகப் பயணிகளைக் கூட்டிச் சென்றால் தானே வியாபாரம் களைகட்டும் என்பது தனியார் சுற்றுலா வியாபாரிகளின் எண்ணம்.

இந்தியப் பெருங்கடலின் அருகே தீவுகளுக்குள் அமைதியாக இயற்கையோடு வசித்து வந்த பழங்குடிகளின் இருப்பிடங்களைக் கிழித்து, சாலையை ஏற்படுத்தி அவர்களின் அழிவுக்கு வித்திட்டது யார் தவறு? வேட்டையாடிய விலங்குகளையும் இயற்கை தரும் கனிகளையும் உண்டு வாழ்ந்து வந்த மக்களை, பாக்கெட்டுகளில் அடைத்து வைத்த தின்பண்டங்களுக்காகக் கையேந்த வைத்தது யாருடைய தவறு? மனித இனத்தின் மொத்த வரலாறும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் பழங்குடிகளைப் பாதுகாப்பது அரசின் தலையாயக் கடமையல்லவா? 

Human Safari-ஐ ஒழித்து ஜாரவா மக்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்? இந்திய அரசுக்கு இ-மெயில் வாயிலாக அழுத்தம் தரலாம். அதற்கான வழிமுறைகளை சர்வைவல் அமைப்பு  https://www.survivalinternational.org/emails/human-safaris இந்த லின்க்கில் விளக்கியுள்ளது. 

Source : Survival International

நீங்க எப்படி பீல் பண்றீங்க