`அவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள்’ - ஆலன் உடலை மீட்கப் போராடும் காவல்துறையினர் | Officials struggle to recover John Allen Chau’s body from Sentinel islands

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (27/11/2018)

கடைசி தொடர்பு:06:00 (28/11/2018)

`அவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள்’ - ஆலன் உடலை மீட்கப் போராடும் காவல்துறையினர்

சென்டினல் தீவில் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனின் உடலை மீட்க அந்தமான் காவல்துறையினர் போராடி வருகிறார்கள். இருந்தும் அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவியுள்ளது. 

சென்டினல் பழங்குடியினர்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்றும் பல்வேறு பழங்குடியின மக்கள் வெளி உலகுடன் தொடர்பில்லாமல் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒரு பழங்குடியின மக்கள்தான் வடக்கு அந்தமான் பகுதியில் வாழும் சென்டினல் பழங்குடியின மக்கள். வெளியிலிருந்து யார் இவர்கள் பகுதிக்கு வந்தாலும் அவர்களைத் தாக்கிக் கொன்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க சுற்றுலாப் பயணியும் மதபோதகருமான 27 வயதுடைய ஜான் ஆலன் சாவ் அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சுற்றுலா வந்திருந்தார். அவர் அந்த வட சென்டினல் தீவுக்குச் செல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். நவம்பர் 14-ம் தேதி அதற்கான முயற்சிகள் பலவற்றைச் செய்தும் அந்தத் தீவுக்குச் செல்ல முடியவில்லை. அதன் பிறகு உள்ளூர் மீனவர்கள் சிலரின் உதவியுடன் சில தினங்களுக்கு முன் வட சென்டினல் தீவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் பழங்குடியின மக்களால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பழங்குடியின மக்கள் அம்புகளாலும் இன்னும் சில கூரிய ஆயுதங்களாலும் அவரைக் கொன்றதாக ஜான் ஆலனை அழைத்துச் சென்ற மீனவர்கள் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் இறந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

சென்டினல் தீவு

இதற்கிடையே ஜான் ஆலன் உடலை மீட்டுத் தர வேண்டும் என்ற அவரின் பெற்றோர்களின் கோரிக்கையை அடுத்து அவரது உடலை மீட்க அந்தமான் போலீஸார் கடந்த சனிக்கிழமையன்று சென்டினல் பகுதிக்குச் சென்றுள்ளனர். ஜான் ஆலனுடன் சென்ற அதே மீனவர்களின் உதவியுடன் போலீஸார் சென்றனர். சென்டினல் தீவுக்கு சுமார் 400 மீட்டர் முன்னதாகவே போலீஸ் வந்த படகு நிறுத்தப்பட்டு தொலைநோக்கி மூலம் கண்காணிக்கப்பட்டது. அப்போது தூரத்தில் கரையில் சில பழங்குடியினர் கையில் வில் அம்புகளுடன் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். எனவே தாக்குதலைத் தடுக்க, ஜான் ஆலன் உடலை மீட்க முடியாமல் போலீஸார் மீண்டும் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜான் ஆலன் இறந்த பிறகு அவரின் உடலை மீட்கும் பணிகளும் சென்டினல் மக்களின் உணர்வுகள் மற்றும் அவர்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளும் முயற்சிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆலன் இறந்த சம்பவம் வெளி உலகுக்குத் தெரிந்த பிறகு அவரின் உடலை மீட்கப் பலமுறை காவல்துறையினர் சென்டினல் தீவுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்ததாக அந்தமான் நிக்கோபார் தீவுகளின் டி.ஜி.பி தேபேந்திர பதக் தெரிவித்துள்ளார். மேலும், ‘அவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள். எங்களால் உள்ளே செல்ல முடியாது. அவர்களை வன்முறைக்குத் தூண்ட நாங்கள் விரும்பவில்லை’ எனவும் கூறியுள்ளார். 

``காவல்துறையினர் இறந்த ஆலன் உடலை மீட்க சென்டினல் பகுதிக்குச் செல்ல முயல்வதால் இன்னும் அதிக தீங்கு ஏற்படும் சூழ்நிலைகளே உருவாகும். மோதல்களும் பதற்றங்களும் மோசமான அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசாங்கத்துக்கும் அந்தமான் நிர்வாகத்துக்கும் இருக்கும் அழுத்தத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஆலன் உடலை மீட்கும் முயற்சிகளை உடனடியாகக் கைவிடுவதே நல்லது” என மானுடவியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களுமான விஷ்வஜித் பாண்யா, சிடா வெங்கடேஷ்வர் மற்றும் மனிஷ் சாண்டி ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். 


[X] Close

[X] Close