`புதிய சூழலில் மூச்சுவிட வேண்டும்!' - கனடாவில் கால்பதித்த ஹஸன் உருக்கம் | A story of Hassan Al Kontar syria Refugee

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (28/11/2018)

கடைசி தொடர்பு:12:33 (28/11/2018)

`புதிய சூழலில் மூச்சுவிட வேண்டும்!' - கனடாவில் கால்பதித்த ஹஸன் உருக்கம்

ஹஸன்


ஹஸன் ஒரு சிரியா அகதி. ஹஸனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை. ஹஸன் தனது தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரனுடன் சிரியாவில் வசித்து வந்துள்ளார். 2006-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணி கிடைத்ததும் சிரியாவில் இருந்து வெளியேறியுள்ளார். 2011-ல் சிரியாவில் தொடங்கிய உள்நாட்டு யுத்தம் ஹஸனின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. ஹஸனின் விசா காலம் முடிவடைந்ததையடுத்து, அதை புதுப்பிக்க விண்ணப்பிக்கிறார். ஆனால், சிரியா தூதரகம் இவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கிறது. சிரியாவில் வந்து ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், சிரியா செல்ல ஹஸனுக்கு விருப்பம் இல்லை. சிரியா சென்றால் ஒன்று கைது செய்யப்படலாம் அல்லது ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்படலாம் என்ற சூழல். வேறுவழியின்றி சட்டத்துக்குப் புறம்பாக ஐக்கிய அரபு அமீரகத்திலே தஞ்சமடைகிறார். 

இதுதொடர்பாக பி.பி.சி-க்கு அவர் அளித்த பேட்டியில், ``நான் ஒன்றும் கொலை செய்யக்கூடிய இயந்திரம் இல்லை. சிரியாவின் எந்தப்பகுதியையும் தான் அழிக்க விரும்பவில்லை. ரத்தம் படித்த என் கைகளைப் பார்க்க நான் விரும்பவில்லை” என்று கூறியிருந்தார். இவரது பாஸ்போர்ட் காலாவதியானதும் வொர்க் பர்மிட் (Work Permit) செல்லாமல் போனது. கிடைத்த பணிகளை செய்துகொண்டிருந்தார். அக்டோபர் மாதம் 2016-ல் இவர் கைது செய்யப்படுகிறார். நாட்டை விட்டு வெளியேறுமாறு ஐக்கிய அரபு அமீரகம் கூறுகிறது. இவரின் தந்தை அதே ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைகிறார்.

ஒருவழியாக ஹஸனின் பாஸ்போர்ட் இரண்டு வருடத்துக்கு புதுப்பிக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 2017-ல் 3 மாதம் டூரிஸ்ட் விசா மூலம் மலேசியா செல்கிறார். ஜனவரி 2018 அந்த டூரிஸ்ட் விசாவும் காலாவதியாகிறது. வேறுவழியின்றி விமானநிலையத்தில் தஞ்சமடைகிறார். விமான நிலைய நாற்காலிகளில் தனது பொழுதை கழித்து வந்தார். மலேசியாவில் அவர் வேலை தேடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

ஹஸன்

கைகளில் பணமும் இல்லை நாட்டை விட்டு வெளியேற வழியும் இல்லை. விமான நிலையமே வீடாக மாறுகிறது. படிக்கட்டுகளில் பொழுதுகள் கழிகிறது. நிமிடங்கள்... நேரங்களாகின.. நேரங்கள்.. நாள்களாகின.. நாள்கள்.. மாதங்களாகின. ஹஸனின் தோற்றம் மாறுகிறது. தேகம் மெலிகிறது ஒழுங்கற்ற முறையில் சிகை அலங்காரம் உள்ளது. விமானநிலைய ஓய்வறையில் கத்தரிக்கோல்களைக் கொண்டு தனது தாடி, தலைமுடிகளை ஒழுங்குப்படுத்துகிறார். அந்த முயற்சி ஓரளவு வெற்றியைக் கொடுக்கிறது. விமான நிலைய ஊழியர்கள் கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட்டு வந்தார்.

இந்தப் போராட்டங்களுக்குகிடையே  #mystory_hassan ,#syrian_stuck_at_airport என்ற ஹேஸ்டேக்குகள் மூலம்  தனது நிலை குறித்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் மூலம் தனது வெளியுலகுக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார். இப்படிதான் இவர் வெளியுலகுக்கு அறிமுகமானார்.

சிரிய அகதி

கடந்த  ஜூன் மாதத்தில் இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் நாசாவுக்கு தான் அனுப்பிய இ-மெயிலை பதிவிட்டிருந்தார். நாசாவின் அடுத்த மார்ஸ் (mars) ப்ராஜெக்டில் தான் இணைய விரும்புவதாகவும். தனக்கு இந்த பூமியில் வாழ இடமில்லை. என்னை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை என அதில் கூறியிருந்தார். சோகங்களுக்கு இடையேயும் உலக அளவில் வைரலான கிகி சேலஞ்சிலும் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டார். விமான நிலையத்தைவிட்டு வெளியேற முயற்சிகள் எடுத்தாலும் அது தோல்வியில் முடிந்தது. 

ஹஸனின் ட்விட்டர் பதிவுகள் உலகத்தின் கவனத்தை ஈர்க்க ஆரம்பிக்கிறது. ஏராளமான மக்கள் இவரை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பின் தொடர்கின்றனர். ஹஸனுக்கு ஆதரவான வார்த்தைகளை அளிக்கின்றனர். 

ஏர் ஆசியா

கடந்த ஜூலை மாதத்தில் ஹஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏர் ஆசியா விமானத்தின் புகைப்படம் ஒன்றைப்பதிவிட்டிருந்தார். விமானத்தில் தற்போது யார் வேண்டுமானாலும் பறக்கலாம் (NOW EVERYONE CAN FLY) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த வாசகத்தை நான் தினமும் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் பறக்கலாம் ஹஸனைத் தவிர என தனது சோகத்தைப் பதிவிட்டிருந்தார். 

ஹஸன் நிலை குறித்து அறிந்த கொலம்பியாவில் இருக்கும் கூப்பர் என்பவர் (Laurie Cooper) தனது நண்பர்களுடன் இணைந்து கனடாவின் குடிவரவு அமைச்சருக்கு ஒரு கடிதம் அளிக்கின்றனர். ஹஸனை கனடாவில் அனுமதிக்குமாறு அந்தக்கடிதத்தில் தெரிவித்திருந்தனர். ஹஸனுக்கும், கூப்பருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் இந்த முயற்சியை மேற்கொள்கிறார்.
ஹஸனுக்கு நிதி திரட்டுவதற்காக பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கனடாவில் தான் அளித்த மனுவுக்காக ஒப்புதலுக்காக அவர் காத்திருக்கிறார்.  

மலேசியா விமானநிலையம்

இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் மலேசியா காவல்துறையினரால் அவர் கைது செய்யப்படுகிறார். விமானநிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் உலா வந்ததற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கனடாவில் இவருக்காக உதவி செய்துக்கொண்டிருந்த கூப்பருக்கும் அவரது நண்பர்களுக்கும் இது அச்சத்தை ஏற்படுத்துகிறது. கனடா அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அகதி

இரண்டு மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கிறார். கூப்பர் உடனடியாக வழக்கறிஞரை ஏற்பாடு செய்து ஹஸனை விடுவிக்கிறார். இரண்டு மாதங்களாக மெளனமாக இருந்த ஹஸனின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் (நவம்பர் 26) ‘ பிரேக்கிங் நியூஸ்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவாகிறது. அதில், `` என்னைப் பார்ப்பதற்கு கற்கால மனிதன் போன்று தோற்றமளிக்கலாம். கடந்த இரண்டு மாதங்களாக உங்களுடன் தொடர்பில் இல்லாததற்கு மன்னித்து விடுங்கள். இன்றும் நாளையும் எனக்கு முக்கியமான நாள். அதாவது நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். இன்று நான் தைவான் விமானநிலையத்தில் இருக்கிறேன். நாளை நான் என் இறுதி இலக்காக கனடாவை அடைவேன். கடந்த 8 வருடங்கள் தனிமையில் பொழுதைக் கழித்தது கொடுமையானது . இந்த 10 மாதங்களில் குளிர் மற்றும் வெயில் வாட்டியது. குடும்ப உறுப்பினர்களின் உதவியில்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. கனடாவில் இருக்கும் என் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அகதிகள் முகாம்களில் உள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” எனப் பேசினார்.

ஹசனிடம் இருந்து கூப்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. நான் வந்துகொண்டிருக்கிறேன் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. திங்கள் இரவு அவர் voncover-ல் தரையிறங்கினார்.  ஹஸனுக்காக விமானநிலையத்தில் கூப்பர் காத்திருந்தார். 8 மாதங்களுக்குப் பிறகு புதிய வாழ்க்கையை ஹசன் தொடங்கவுள்ளார்.

கூப்பர்

விமானநிலையத்தில் பேசிய ஹஸன், ``உண்மையான வாழ்க்கையில், கனவுகளைத் தவிர மிகவும் அழகாகத்  தருணங்கள் உள்ளன. இந்தப் புதிய சூழலில் மூச்சுவிட வேண்டும் . எனக்கு, மீண்டும் தெருவில் நடக்க வேண்டும். புதிய காற்றைச் சுவாசிக்க வேண்டும். அது ஒரு சாதாரண விஷயம் இல்லை. இது சுதந்திரம் ஒலி மற்றும் வாசனை தான்” என்று உருக்கமாக கூறினார்.


[X] Close

[X] Close