வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (28/11/2018)

கடைசி தொடர்பு:18:23 (28/11/2018)

3000 அடி உயரம்... 23 முறை டைவ்... லயன் ஏர் விமானியின் கடைசிப் போராட்டம்!

ஜாவா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்துடன் விமானி கடைசி வரை போராடியது தெரியவந்துள்ளது.

லயன் ஏர்

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவிலிருந்து பங்கல் தீவு நோக்கிக் கடந்த அக்டோபர் 29-ம் தேதி ஜெடி-610 என்ற விமானம் புறப்பட்டது. போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்த இந்த விமானம் காலை 6.20 மணிக்கு ஜகர்தாவிலிருந்து புறப்பட்டது. 7.20 மணிக்கு பங்கல் தீவைச் சென்றடைந்து இருக்க வேண்டும். ஆனால், விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறைக்கும் விமானத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனர். ஜாவா கடலில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானத்தில் பயணித்த 189 பேர்களின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து கடற்படை அதிகாரிகள், நீர்மூழ்கி வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். விமானம் கடலில் விழுந்ததால் அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

விமானத்தின் கறுப்புப் பெட்டி நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த அதிகாரிகள் விபத்து குறித்த முதல்கட்டத் தகவலை தெரிவித்துள்ளனர். அதில் விமானத்தின் தானியங்கி பாதுகாப்பு முறை செயலிழந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக 3,000 அடி உயரத்தில் இருந்து விமானத்தின் மூக்குப் பகுதி கீழ்நோக்கிச் சென்றுள்ளது. அப்போது விமானம் மணிக்கு 450 கி.மீ வேகத்தில் 186 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்தது. பயணிகளின் உயிரைக் காக்கும் பொறுப்புடன் விமானி கடுமையாகப் போராடியுள்ளார். சுமார் 23 முறை விமானமானது கீழ்நோக்கிச் சென்றுள்ளது. ஆனால், விமானியின் முயற்சிகளில் கடைசிவரை பலனளிக்கவில்லை. இதனால், விமானம் 1,000 அடி உயரத்துக்கு வந்தபோது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. சென்சாரில் இருந்து தவறான சிக்னல்கள் வெளியானதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது முதல் கட்டத்தகவல்தான் விரிவான ஆய்வுக்குப் பின்னரே விபத்து குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையை இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.