வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (28/11/2018)

`பாகிஸ்தானில் சித்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவார்!’ - இம்ரான் கான்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடைபெறும் எனக் கூறுவது முட்டாள்தனம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். 

இம்ரான் கான் - சித்து

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனிதத் தலத்துக்கும், இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் புனிதத் தலத்துக்கும் இடையேயான புதிய வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சருமான  நவ்ஜோத் சிங் சித்துவும் கலந்துகொண்டார். அப்போது பேசிய இம்ரான் கான், சித்துவுக்கு ஆதரவாகப் பேசினார். ``எனது பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பிய பின் சித்து நிறைய விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். சித்து அமைதியை முன்னிறுத்தியே பேசி வருகிறார். அப்படி இருந்தும் அவர் ஏன் இந்தியாவில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு வந்து தேர்தலில் நின்றால் கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார். 

இரு நாடுகளுக்கு இடையே உறுதியான நட்பு ஏற்படச் சித்து இந்திய பிரதமர் ஆகக் காத்திருக்க வேண்டியதில்லை என நான் நம்புகிறேன். நான் எப்போது எல்லாம் இந்தியா வருகிறேனோ, அப்போது இந்திய மக்கள் கூறுவது பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமைதியில் உடன்பாடில்லை என்பதே. இந்திய மக்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் பாகிஸ்தானின் பிரதமர். என்னுடன் இங்கு பல கட்சிகள் உள்ளன. இந்தியாவுடனான நட்புறவில் முன்னோக்கிச் செல்லவே விரும்புகிறோம். கடந்த 70 வருடங்களாக நாம் சண்டையிட்டுள்ளோம். இரு தரப்பிலும் தவறுகள் உள்ளன. நமக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எரித்து அமைதி உண்டாக எல்லைகளைத் திறந்து வைப்போம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க