வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:43 (29/11/2018)

`மீண்டும் நிலவுக்குப் போகிறோம்.. நீங்கள் நினைப்பதைவிட விரைவாக’ -ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்த நாசா

 

நிலவு

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு இன்சைட் விண்கலத்தைச் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறக்கிய மகிழ்ச்சியில் இருக்கிறது நாசா. அந்த வெற்றிக் களிப்போடு அதன் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றியும் தற்பொழுது அறிவித்திருக்கிறது. நாசாவின் அடுத்த இலக்கு வெகு தொலைவில் இல்லை நமக்கு அருகில் இருக்கும் சந்திரன்தான். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளது. நாசவின் விண்வெளிக் கலம் இறுதியாக 1972-ம் ஆண்டில் நிலவில் தரையிறங்கியது. இந்தத் தகவலை நாசாவின் நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டெயின் (Jim Bridenstine) அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

நாசா

``சந்திரனுக்குப் பயணம் செய்வதற்காக அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம், அமெரிக்கா மீண்டும் நிலவுக்குச் செல்லப்போகிறது. அது நீங்கள் நினைப்பதை விடவும் விரைவாக நடக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி நாசா சில தனியார் நிறுவனங்களின் உதவியோடு அடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாக மீண்டும் மனிதர்களை அனுப்பும் எனத் தெரிகிறது.

``அவர்கள் உண்மையாகவே அங்கே சென்றார்களா இல்லையா என்பதை ஆராய வேண்டும், அதுவே எங்கள் விருப்பம்" என்று கடந்த சில நாள்களுக்கு முன்னால் ரஷ்யா அமெரிக்காவைப் பார்த்து கிண்டலடித்திருந்தது. தேசிய விண்வெளி நிறுவனத்தின் (Roscosmos) தலைவர் டிமிட்ரி ரோகோஸின் இதைக் கிண்டலாக தெரிவித்திருந்தாலும் உலகம் முழுவதிலும் அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கூட நாசா தற்பொழுது இந்தத் தகவலை வெளியிட்டிருக்கக்கூடும்.