வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (29/11/2018)

கடைசி தொடர்பு:12:53 (29/11/2018)

`3 அல்ல 90 கொலைகள்’ - அமெரிக்க சீரியல் கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்

சீரியல் கில்லர்

டெக்ஸாஸ் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஒரு முதியவர் தினமும் விசாரணை அறைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். 3 கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வரும் அந்த முதியவரின் பெயர் சாமுவேல் லிட்டில் (வயது 79). விசாரணை அறையில் சாமுவேல் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் விசாரணை அதிகாரிகளை மிரளச் செய்துள்ளன. அந்த அறையில் சாமுவேல் பேசப் பேச விசாரணை அதிகாரிகளுக்கு வியர்த்து கொண்டிருக்கிறது. 3 கொலைகள் அல்ல மொத்தம் 90 கொலைகள் என அதிரவைக்கிறார் லிட்டில். கடந்த காலங்களை அசைபோடும் சாமுவேல் கொலை செய்த இடங்கள், கிராமங்கள் குறித்த தகவல்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார். குற்றவாளிகளை மிரளவைத்த அந்த அறை தற்போது சாமுவேலின் வாக்குமூலத்தைக் கேட்டு மிரண்டுபோயுள்ளது. 

கொலை

ஜனவரி, 1978 ல் நான்கு குழந்தைகளுக்குத் தாயான 36 வயதுப் பெண் ஒருவர் கழுத்தறுப்பட்ட நிலையில் நிர்வாணமாக இறந்து கிடக்கிறாள். சரியாக 4 வருடங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 1982-ம் ஆண்டு மரியன் பகுதியில் ரோஸி ஹில் (Rosie Hill) என்ற 21 வயதுப் பெண் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறாள். முதல் சம்பவம் நடந்த இடத்துக்கும் இதற்கும் 500 மைல் தொலைவு. 14 வருடங்களுக்குப் பிறகு மெலிசா தாமஸ் என்ற பெண் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். 18 வருட இடைவெளியில் மூன்று கொலைகள். இந்தக் கொலைவழக்கில் சாமுவேலை காவல்துறை கைது செய்கிறது.

2014, செப்டம்பர் மாதம் சாமுவேல் மீதான குற்றங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நீருபிக்கப்படுகிறது. நீதிமன்றம் இவருக்கு முன்று ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்குகிறது. சாமுவேல் சிறையில் கம்பிகளுக்குப் பின்னால் தனது முதுமை காலத்தை கழிக்க தொடங்குகிறார். டி.என்.ஏ வின் அடிப்படையில் இந்த வழக்கில் அவர் சிக்கினார். இந்நிலையில் 1994- ஆண்டு நடைபெற்ற ஒரு கொலையில் இவரின் டி.என்.ஏ சிக்குகிறது.1994-ல் டெக்சாஸில் டென்சி கிறிஸ்டி என்ற பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையில் லிட்டில் டி.என்.ஏ இருப்பது தெரியவருகிறது.

சாமுவேலின் தாய் சிறையில் இருந்தபோது அவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. சாமுவேல் லிட்டில் முதன்முறையாகத் தனது 16 வயதில் குற்றவழக்கில் சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1957 - 1975 இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 25 முறை சிறை சென்றுள்ளார். வீடற்ற சாமுவேல் தனது இளமைக்காலத்தின் பெரும் பகுதியை சிறையில் அனுபவித்துள்ளார். திருட்டு, கற்பழிப்பு, போலீஸ் அதிகாரியைத் தாக்கியது உள்ளிட்ட சிறு சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுவந்துள்ளார்.

சாமுவேல் லிட்டில் நிறைய கிரிமினல் வழக்கில் கைது செய்யப்படுகிறார். ஆனால் நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றங்கள் நீருபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 6 அடி உயரம் கொண்ட பாகுவான உடலைக்கொண்ட லிட்டில் காசுக்காக குத்துச்சண்டை போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். போதை மருந்துக்கு அடிமையானவர்கள், விபசாரங்களில் ஈடுபடுபவர்கள்தான் சாமுவேலின் குறி. 1982-ம் ஆண்டு மரியன் பகுதியில் கொல்லப்பட்ட ரோஸி ஹில்லை இரவு விடுதியிலிருந்துதான் அழைத்துச் சென்றுள்ளார் சாமுவேல்.

கொலைகள்

1976-ல் ஸ்மித் என்ற பெண்ணை லிட்டில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணைக் கடத்திய லிட்டில் அவரின் ஆடைகளைக் கொண்டே அவரின் கைகளை கட்டியுள்ளார். அவரது கைகளை இரும்பு ராடுகளுக்கு பின்னால் கட்டியுள்ளார். அவரிடமிருந்து தப்பித்துதான் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட போது தான் அந்தப் பெண்ணைத் தாக்க மட்டுமே செய்தேன் என போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் மூன்று மாதம் சிறைத் தண்டனை அனுபவித்து உள்ளார்.

1982-ல் மெலிண்டா என்ற பெண்ணின் மரணத்தில் இவர் மீது காவல்துறை சந்தேகப் பார்வை விழுகிறது. அந்தப் பெண்ணை இறுதியாக லிட்டில் அழைத்துச் சென்றதாக இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளிக்கின்றனர். நீதிமன்றத்தில் ஆதாரம் சமர்பிக்க முடியாததால் இவர் விடுதலையாகிறார். இந்தத் தகவல்கள் அமெரிக்காவில் வெளியாகும் ஆங்கில நாளிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமுவேல் லீட்டில்

சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் லிட்டில் விசாரணை அறையில் தான் செய்த குற்றங்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார். தான் எந்த வாகனத்தைப் பயன்படுத்தினேன் கொலை செய்யப்பட்ட பெண்களின் முகங்கள் ஆகியவற்றை வரைந்துகாட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாமுவேல் லிட்டிலின் குற்றங்கள் அனைத்தும் நீருபிக்கப்பட்டால் அமெரிக்க வரலாற்றில் ஒரு கொடிய சீரியல் கில்லராக ( serial killer) இவரது பெயர் இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.