வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (29/11/2018)

கடைசி தொடர்பு:13:40 (29/11/2018)

`தண்டவாளத்துக்கு வழிகாட்டிய ஜி.பி.எஸ்! - அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவில் நீண்ட நேரமாக ஒரு கார் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டு தவித்துள்ளது கார் மாட்டிய காரணத்தைக் கேட்டால் சிரிக்கவே தோன்றுகிறது. 

கார்

PhotoCredits: @CityofDuquesnePolice

அமெரிக்காவில் பென்சில்வானியா (Pennsylvania) மாகாணத்தில் உள்ள Duquesne என்ற நகரில் கடந்த 21-ம் தேதி இரவு பத்து மணியளவில் ஒரு கார் தண்டவாளத்தில் மாட்டியுள்ளது. அதை வெளியே எடுக்கமுடியவில்லை எனக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காரில் ஒரு பெண் இருந்ததைப் பார்த்து அவரையும் காரையும் மீட்டுள்ளனர். பிறகு நடந்த விசாரணையில் தன் செல்போனில் உள்ள ஜி.பி.எஸ் வழிகாட்டுதலின்படியே தான் வண்டியை இயக்கியதாகவும் இறுதியில் அது தண்டவாளத்தின் வழியே செல்ல வேண்டும் என தனக்கு கூறியதால் வண்டியைத் திருப்பியதாகவும் அந்தப் பெண் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவத்தை புகைப்படத்துடன் Duquesne நகரக் காவல்துறையினர் தங்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், `` ஜி.பி.எஸ் உதவியால் அந்தப் பெண் காரை இயக்கியுள்ளார். அது தன்னுடைய தவறு என அவர் ஒப்புக்கொண்டார். அந்தப் பெண் மது அருந்தியுள்ளார். அதனால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனப் புரிந்துகொண்டு செயல்படும் அளவுக்கு அப்போது அவரின் மனநிலை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

காவல்துறையினரின் இந்தப் பதிவு உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிலர் காரை ஓட்டிய பெண்ணை கிண்டல் செய்தும் சிலர் அனுதாபங்கள் கூறி ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். தொழில்நுட்பங்களை மிகவும் தீவிரமாக கடைப்பிடித்தால் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்களும் நிகழலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.