வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (29/11/2018)

கடைசி தொடர்பு:17:36 (29/11/2018)

கேரளா வெள்ளத்தில் கர்ப்பிணியைக் காப்பாற்றிய விமானிக்கு `சிறந்த ஆசியர்’ விருது

கேரளா வெள்ளத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணை மிகுந்த சிரமத்துக்கிடையே காப்பாற்றிய இந்திய கடற்படை விமானிகள் கமாண்டர் விஜய் வர்மா, கேப்டன் ராஜ்குமார் ஆகியோருக்கு 'சிறந்த ஆசியர்கள்' (Asian of the Year 2018)  விருது வழங்கப்பட்டுள்ளது. 

கர்ப்பிணிக் பெண்ணைக் காப்பாற்றிய விமானிகள்

கொச்சியில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து சஜிதா ஜபில் என்ற 25 வயது பெண்ணை விஜய் வர்மா ஏர்லிஃப்ட் செய்து மீட்டார். சஜிதாவை விஜய் வர்மா மீட்கும் காட்சிகளைப் பார்த்து இந்தியாவே பதை பதைத்துப்போனது. ``18 வருடங்களாக ஹெலிகாப்டர் இயக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால், சஜிதாவை மீட்பது சவாலாக இருந்தது’’ என்று விஜய் வர்மா மீட்புப் பணிக்குப் பிறகு கூறினார். மீட்கப்பட்ட சஜிதாவுக்கு சற்று நேரத்தில் கொச்சி கடற்படை மருத்துவமனையில் குழந்தையும் பிறந்தது. அதுபோல் கேப்டன் ராஜ்குமார் மொட்டை மாடி மீது ஹெலிகாப்டரை சில நிமிடங்கள் இறக்கி 26 பேரை உயிருடன் மீட்டார் .

கடற்படை விமானிகள் மீட்புப்பணி பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது, அவர்களின் உழைப்பை அங்கீகரித்து சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான `ஸ்ட்ரெயிட் டைம்ஸ்'  பத்திரிகை இருவருக்கும் `சிறந்த ஆசியர்கள்' விருது அறிவித்துள்ளது. 

இந்தோனேசியாவில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த எக் கோக் சூங் என்ற பராகிளைடர் மீட்புப்பணியில் தன் உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்டு சிறுமி ஒருவரைக் காப்பாற்றினார். இந்தியாவில் ஹிமாசலப்பிரதேசத்தில் நடந்த பாராகிளைடர் போட்டியில் பங்கேற்க வந்த எக் கோக் சூங் விபத்தில் சிக்கி பலியானார். கோக் சூங்கின் சேவையைப் பாராட்டி இவருக்கும் சிறந்த ஆசியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சுத்போ புர்வா நக்ரஹோவும் இந்த விருதைப் பெறுகிறார். 

ஜகர்தாவைச் சேர்ந்த ஆசிய பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்புக் கழகம், ஸ்ட்ரெயிட் டைம்ஸ் பத்திரிகையுடன் இணைந்து இந்த விருதை வழங்குகிறது.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க