`என் மகனின் மகிழ்ச்சிக்காக இதைச் செய்கிறோம்’ - லிட்டில் பெப்பிள் தந்தை உருக்கம் | boy finds happiness talking with online fans - Little Pebble

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:13:20 (30/11/2018)

`என் மகனின் மகிழ்ச்சிக்காக இதைச் செய்கிறோம்’ - லிட்டில் பெப்பிள் தந்தை உருக்கம்

லிட்டில் பெப்பிள்

Image Credit: https://www.facebook.com/PeoplesDaily/

லிட்டில் பெப்பிள் என்ற பெயரால் அறியப்படும் இந்த 5 வயது கொழு கொழு குழந்தை சீனாவில் உள்ளவர்களுக்குப் பிரபலம். Kuaishou என்ற ஆப்பில் இந்தச் சிறுவனை ஏராளமானவர்கள் பின் தொடருகின்றனர். இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இணையத்தில் ஹிட் கொடுத்து வருகிறது. இது என் பள்ளிநேரம் எனக் கைகளில் புத்தகம் மற்றும் பேனாக்களுடன் போஸ் கொடுக்கிறார். சிறுவன் உணவு உண்பது பாட்டுப் பாடுவது என அனைத்துச் செயல்பாடுகளையும் இவரின் தந்தை அந்த ஆப் மூலம் பதிவிட்டு வருகிறார். 

இந்தச் சிறுவனுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளது. நோய் குறித்து சிறுவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால், தான் தினமும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதும் ஏராளமான மாத்திரைகள் உட்கொள்வதும் சிறுவனுக்கு ஒருவித தனிமையை உணர்த்தியது. 14 மாதக் குழந்தையாக இருந்தபோது பெற்றோருக்கு இந்த நோய் குறித்து தெரியவந்துள்ளது.

குழந்தை

இதுகுறித்து சீனப் பத்திரிகைக்குச் சிறுவனின் தந்தை அளித்த பேட்டியில், ``14 மாத குழந்தையாக இருந்தபோது சிறுநீரக நோய் குறித்து தெரியவந்தது. சிறுநீரக அமைப்பு இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. தனக்கு இதுபோன்ற நோய் இருப்பது குழந்தைக்குத் தெரியாது. மழலையர் பள்ளிகளில்கூட நாங்கள் அவனைச் சேர்க்கவில்லை. நோய் குறித்த பயம்தான் எங்களுக்கு. இந்த ஆப் பயன்படுத்துவதற்கு முன்பு மொபைல் போன் மற்றும் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பான். மொபைலில் யாரைப் பார்த்தாலும் சிரித்துவிட்டு அங்கிருந்து மறைந்து ஓடிவிடுவான். அவன் இதை வாடிக்கையாகச் செய்வதைக் கவனித்தோம். அதன்பிறகு அவனுடன் சில வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டோம். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்தது. அவனும் மகிழ்ச்சியாக இருந்தான். இதையடுத்து தான் Kuaishou ஆப்பில் அவனுக்காக ஒரு கணக்கைத் தொடங்கினோம். அவனின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்தோம். சில வீடியோக்களை லைவ் செய்தோம். குழந்தையின் ஒரு மாத மருத்துவச் செலவுக்கு 1,150 டாலர் (இந்திய மதிப்பில் 80,000 ரூபாய்) செலவாகிறது” என்றார்.

சிறுவனின் வீடியோக்களை வைத்து அவரது தந்தை பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார் என சிலர் விமர்சனம் செய்திருந்தனர். அதற்கு பதிலளித்தவர் என் மகன் வீடியோக்களை எடுக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனின் மகிழ்ச்சிக்காக இதைச் செய்கிறோம் எனக் கூறியுள்ளார்.

சிறுவனின் மருத்துவச் செலவுக்கு நெட்டிசன்கள் உதவிபுரிந்து வருகின்றனர். இந்த ஆப்பில் சிறுவனின் ஒவ்வொரு பதிவுக்கும் பணம் கொடுத்து வருகிறது. 


[X] Close

[X] Close