வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:17:23 (30/11/2018)

போலீஸ் கொலையில் கருணாவுக்குத் தொடர்பு! - இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் கட்சி பகீர்

ராஜபக்சேவுடன் கருணா

இலங்கையின் மட்டக்களப்பில், நேற்று இரண்டு போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் காட்டிக்கொடுத்த அவ்வியக்கத்தின் முன்னாள் தளபதி கருணாவுக்குத் தொடர்பு இருப்பதாக, ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. 

ஈழத்தமிழர் தாயகப் பகுதியான கிழக்கு இலங்கை மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், வவுனதீவு எனும் இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில், நேற்று இரவு வழக்கம்போல் இரண்டு சிங்கள போலீஸார் பணியில் இருந்தனர். அப்போது, அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலையைப் பொறுப்பேற்க மற்ற போலீஸார் சென்றபோதே, கொலையானது தெரியவந்தது. 

அந்தப் பிரதேசத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி வந்ததற்குப் பின்னர், இதைப் போன்றதொரு நிகழ்வு நடந்ததில்லை. அப்பாவி தமிழ் மக்கள் ஆங்காங்கே தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் நடந்தாலும், சிங்கள போலீஸார்  இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது இலங்கையில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை பற்றி பேசப்பட்டது. இன்றைய கூட்டத்தில், பிரச்னையைக் கிளப்பிய ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நளின் பண்டாரா, ”(கருணா) விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த 27-ம் தேதியன்று ட்விட்டரில் செய்த பதிவுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதோ எனத் தோன்றுகிறது என்றும், அரசாங்கம் இதுபற்றி விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறினார். 

அவரைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரனும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். ரணிலின் ஆட்சி கலைக்கப்பட்டு, மகிந்த ராஜபக்சேவைப் பிரதமராக்கிய அக்டோபர் 26-ம் தேதிக்குப் பிறகு, கருணா அம்மானின் பழைய பாணி மீண்டும் உயிர்ப்பித்துவிட்டதா என அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.  சமீப மாற்றத்துக்குப் பிறகு, இந்த மாதிரியான நபர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு உரியனவாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார். 

சர்ச்சைக்குரிய அந்த ட்விட்டர் செய்தியில், ``ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் என்னை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். நிறையப் பேர் எனக்கு குறுந்தகவல்கள் அனுப்பவும் தொலைபேசியில் பேசவும் செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நினைவூட்டிக்கொள்வது, நான் மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா அம்மான். 2004-க்கு முன்னர் கருணா அம்மான் எப்படிப்பட்டவன் என மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.