வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (01/12/2018)

கடைசி தொடர்பு:09:07 (01/12/2018)

`நேரலையில் கஞ்சா புகைத்த எலான் மஸ்க்' - கண்டனம் தெரிவித்த நாசா நிர்வாகி

எலான் மஸ்க்

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதுமே அறியப்பட்ட ஒரு நபராக இருந்து வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா எனப் பல பிரபலமான நிறுவனங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். உலகுக்குப் பல விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் அவர், கடந்த செப்டம்பர் மாதம் நேரலையில் செய்த ஒரு செயல் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 6-ம் தேதி Joe Rogan Experience என்ற நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் எலான் மஸ்க். நிகழ்ச்சி முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் நிகழ்ச்சியை நடத்துபவர் கஞ்சாவைப் பற்ற வைக்க அதை வாங்கிப் புகைத்தார் எலான் மஸ்க். அதற்காக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. அன்றைக்குத் தொடங்கிய சர்ச்சை இரண்டு மாதங்கள் கடந்தும் தீரவில்லை. நாசாவின் விண்வெளிப் பயணத் திட்டங்களில் அவரது நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் பங்கு சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், இவர் இதுபோன்று செய்ததால் நாசா ஸ்பேஸ் எக்ஸ் தொடர்பான உறவை மறுபரிசீலனை செய்யும் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்தச் சர்ச்சை தொடர்பாக நாசாவின் நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டெயின் விளக்கமளித்திருக்கிறார். அமெரிக்க விண்வெளி வீரர்களைக் கையாளும் நிறுவனங்கள் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக பல தடவைகள் எலான் மஸ்க்கிடம் உரையாடி விட்டதாகவும் அது நிச்சயமாகச் சரியான நடத்தை கிடையாதுதான், அதே நேரத்தில் இது போன்ற நடவடிக்கையை அவரிடம் இனிமேல் நீங்கள் பார்க்க வாய்ப்பில்லை" என்றும் தெரிவித்திருக்கிறார்.