வரலாறு காணாத வன்முறை! - எமெர்ஜென்சியை எதிர்கொள்கிறதா ஃப்ரான்ஸ்? | France fuel protests May Impose Emergency

வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (03/12/2018)

கடைசி தொடர்பு:10:11 (03/12/2018)

வரலாறு காணாத வன்முறை! - எமெர்ஜென்சியை எதிர்கொள்கிறதா ஃப்ரான்ஸ்?

ஃப்ரான்ஸில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஃபிரான்ஸ் கலவரம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஃப்ரான்ஸின் அதிபராக இமானுவேல் மேக்ரூன் உள்ளார். சமீபத்தில், ஃப்ரான்ஸில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டது. இதற்கு ஃப்ரான்ஸ் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். வரி உயர்வை எதிர்த்து, ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஃப்ரான்ஸின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட சிலர் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டதால், பொதுமக்களின் போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. 

ஃபிரான்ஸ் கலவரம்

நேற்று ஒரு நாள் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, சுமார் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மேலும், கலவரத்தில் அடிபட்ட ஒருவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

ஃபிரான்ஸ் கலவரம்

சாதாரணமாகத் தொடங்கிய போராட்டம், எப்படி இவ்வளவு பெரிய கலவரமாக மாறியது என்பது தெரியாமல், ஃப்ரான்ஸ் அரசு திண்டாடி வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு யார் தலைமை வகிப்பது, இதற்கு யார் காரணம் போன்ற எதுவும் அரசுக்குத் தெரியவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், போராட்டக்காரர்களுடன் பேச அரசு தயாராக இருப்பதாகவும், சிலர் பேச்சுவார்த்தைக்கு வரலாம் எனவும் அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

ஃபிரான்ஸ் கலவரம்

G20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அதிபர் இமானுவேல் மேக்ரூன், தன் நாட்டில் நடக்கும் போராட்டத்தின் காரணமாக, மாநாட்டில் முழுமையாகப் பங்கேற்காமல் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இன்று, இந்தக் கலவரம் தொடர்பாக அதிபர், பிரதமர், அமைச்சர்கள் அடங்கிய பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஃப்ரான்ஸ் நாட்டில் தற்போது வரலாறு காணாத மிகப்பெரும் கலவரம் நிலவிவருவதால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போராட்டத்தின் எதிரொலியாக, இன்று ஃப்ரான்ஸ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close