அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்தியர்களின் சட்டவிரோத தஞ்சம்! | More Than 20,000 Indians Have Sought Political Asylum In US Since 2014

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:12:07 (03/12/2018)

அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்தியர்களின் சட்டவிரோத தஞ்சம்!

அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்தே, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் அதிக அளவில் குடியேறுவதைத் தடுப்பதற்கான...

மெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 20,000-க்கும் அதிகமான இந்தியர்கள் அந்த நாட்டில் அடைக்கலம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவில் அடைக்கலம்

அமெரிக்க வேலை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை என்ற கனவுகளுடன் படித்துப் பட்டம் பெற்று, அதற்கேற்ற வேலையையும் தேடிக்கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகும் இந்தியர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஏஜென்டுகளிடம் பணம் கொடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடும் இந்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ட்ரம்பின் ஹெச்-1பி விசா கெடுபிடி

அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்தே, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் அதிக அளவில் குடியேறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

பணி நிமித்தமாக அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் விசா காலம் முடிந்தவுடன் அதை நீட்டிக்காமல் அவர்களை வெளியேற்றக்கூடிய புதிய விதிமுறை ஒன்றை ட்ரம்ப் அரசு அக்டோபர் முதல் அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் அமெரிக்காவில் ஹெச்-1பி விசா காலம் முடிந்த பிறகு, அதை நீட்டிக்கக் கோரிக்கை வைத்து அவை நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்களால் மீண்டும் விண்ணப்பித்து அங்குத் தொடர்ந்து இருக்க முடியாது என்ற நிலை உருவானது. இதனால், பல இந்திய மென்பொருள் நிறுவனங்களால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இந்தியப் பணியாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களே ஹெச்-1பி விசா விதிமுறைகளில் காட்டப்படும் கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தன. 

ஹெச்-1பி விசா என்பது, அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணிக்குத் தேவையான நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதற்காக வழங்கப்படுவது. அதன்படி, நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப ஆண்டுக்குச் சுமார் 10,000 பணியாளர்களை இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரவழைத்துக்கொண்டிருந்தன. 

இந்த நிலையில்தான், ஹெச்-1பி விசா விண்ணப்ப முறையில் புதிய விதி உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் கொண்டுவந்தது. இதன்படி அதிகத் திறன்மிக்க மற்றும் அதிக ஊதியம் வழங்கப்படும் பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ட்ரம்ப் அரசின் கெடுபிடி

இப்படிச் சட்டபூர்வமாக ஒருபுறம் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தைக் குறைக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டாலும், மறுபுறம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் அடைக்கலம் கோருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

சொந்த நாட்டில் குற்றங்கள், வன்முறையில் ஈடுபட்டு, அமெரிக்காவில் அரசியல் புகலிடம் கோருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், இனம், மதம், தேசியம், குறிப்பிட்ட சமூகக் குழுக்கள், அரசியல் ரீதியாகவும் விசாரிக்கப்பட்டபின்பே புகலிடம் தரப்படுகிறது. ஆனாலும், கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் அதிகமாக உள்ளதாக அது தெரிவித்துள்ளது. 

அதிகரிக்கும் சட்டவிரோத தஞ்சம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக அரசியல் கோரும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தவர்கள்தாம். இதனாலேயே, அமெரிக்க உள்துறை அமைச்சகம், கலிபோர்னியாவில் செயல்படும் வட அமெரிக்க பஞ்சாப் அமைப்புக்கு (North American Punjabi Association -NAPA) இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. 

அதில், ``2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 7, 214 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 296 பேர் பெண்கள். கடந்த 2014-ம் ஆண்டில் 2,306 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 146 பெண்கள். 2015-ம் ஆண்டில் 96 பெண்கள் உள்ளிட 2,971 இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டு அதிகரித்தது. 123 பெண்கள் உட்பட 4,088 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டனர்.  2017-ம் ஆண்டில் 187 பெண்கள் உட்பட 3 , 656 இந்தியர்கள் அடைக்கலம் கோரினர். 

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரிய இந்தியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட அமெரிக்க பஞ்சாப் அமைப்பு

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வட அமெரிக்க பஞ்சாப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் சகால், இந்தப் பிரச்னை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார். இந்த அமைப்பு, பஞ்சாப்பிலிருந்து அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்காகச் செயல்படுகிறது. 

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக அவர்கள், டிராவல் ஏஜென்ட்டுகளுக்கு நபர் ஒருவருக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கொடுக்கின்றனர். அப்படிப் பணம் கொடுத்து முயற்சி மேற்கொண்டாலும், அனைவராலும் அமெரிக்காவில் நுழைந்து விட முடிவதில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close