வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (03/12/2018)

கடைசி தொடர்பு:12:21 (03/12/2018)

எஜமானின் மரணத்தைத் தாங்கமுடியாத நாய்! - கண்கலங்கவைத்த H.W. புஷ்ஷின் இறுதிச்சடங்கு

இறந்த H.W. புஷ்ஷின் வளர்ப்பு நாய், அவரது உடலுக்கு அருகில் சோகமாகப் படுத்திருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது. 

நாய்

அமெரிக்காவின் 42-வது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், கடந்த 1-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். முன்னதாக, H.W. புஷ், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் தன் மனைவி பார்பரா புஷ் இறந்தபிறகு, அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. கடந்த சில மாதங்களில் மட்டும், இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். 

H.W. புஷ்ஷின் இறுதிச் சடங்கு, வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதனால், அவரது உடல் இன்று எலிங்டன் ரிசர்வ் தளத்திற்குக் கொண்டுசெல்லப்பட உள்ளது. இந்நிலையில், புஷ் வீட்டின் செய்தித்தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் (Jim McGrath) தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு, அதோடு ‘ பணி முடிந்தது’ என கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் H.W. புஷ்ஷின் வளர்ப்பு நாய் ‘சுல்லி’ (Sully) இறந்த அவரது உடல் அருகில் மிகவும் சோகமாகப் படுத்திருந்தது. இந்தப் புகைப்படம் உலக அளவில் அனைவரது மனத்திலும் இடம்பிடித்து, சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. 

'சுல்லி' என்ற சேவை நாய், கடந்த ஜூன் மாதம் புஷ் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இது, அமெரிக்காவின் கால்நடை சேவை மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நாய் தன் வீட்டுக்கு வந்தபோது, புஷ் இதை வரவேற்று ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருந்தார். அதில், ‘ எங்கள் வீட்டுக்கு ஒரு புதிய நபர் வந்துள்ளார், மகிழ்ச்சியாக உள்ளது. ‘சுல்லி’ மிகவும் அழகான பயிற்சிபெற்ற நாய். அமெரிக்காவின் கால்நடை சேவை மையத்திலிருந்து வந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 

H.W. புஷ் பார்பரா நோயால் பாதிக்கப்பட்டு, இருசக்கர நாற்காலியில் சில காலம் தன் வாழ்வைக் கழித்துவந்தார். அவர் உயிருடன் இருக்கும் போது, சில்லி அவருக்காகக் கதவு திறப்பது, தேவையான பொருள்களைக் கொண்டுவந்து தருவதுபோன்ற பல உதவிகளைச் செய்து வந்துள்ளது. குறைந்த காலமே புஷ்ஷுடன் பழகியிருந்தாலும், உரிமையாளரை இந்த நாய் அதிகம் நேசித்துள்ளது எனப் பலர் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டுவருகின்றனர்.